உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சட்டம் துணை இருக்கு... வாழ்வதற்கு வழி இருக்கு!

சட்டம் துணை இருக்கு... வாழ்வதற்கு வழி இருக்கு!

மூ த்த குடிமக்களை போற்றி, பாதுகாக்கும் நோக்கில், ஆண்டுதோறும், ஆக., 21ல் தேசிய மூத்த குடிமக்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தாண்டுக்கான மையக் கருத்து: 'உள்ளடக்கிய எதிர்காலத்துக்கு, முதியோர் குரலை வலுப்படுத்துதல்'.பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலச்சட்டத்தின் படி, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் நலன் காக்க, அரசு சார்பில், சில உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. பெறப்படும் மனுக்களை விரைந்து தீர்ப்பதற்காகவும், குழந்தைகள் மற்றும் சட்டப்பூர்வ வாரிசுகளிடமிருந்து மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோருக்கு பராமரிப்புத் தொகையைப் பெறவும், ஒவ்வொரு துணை கோட்டத்திலும், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட சமூக நல அலுவலர்கள், பராமரிப்பு அலுவலர்களாகவும், சமரச அலுவலர்களாகவும் செயல்பட்டு வருகின்றனர். தீர்ப்பாயத்தின் உத்தரவுகளுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் தலைமையில் மேல் முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.  ஒரு மூத்த குடிமகன் அல்லது பெற்றோர், தனது சொந்த வருவாயிலோ அல்லது அவருக்கு சொந்தமான சொத்தில் இருந்தோ தன்னை பராமரிக்க முடியாத நிலையில், சட்டப்பிரிவு, 5ன் கீழ் தனது குழந்தைகள் மற்றும் சட்டப்பூர்வ வாரிசுகளிடமிருந்து, பராமரிப்பு தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். மாதாந்திர வாழ்க்கைப்படி வேண்டி, இச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம், 90 நாட்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும்.  தீர்ப்பாய உத்தரவை ஏற்க தவறினால், அபராதம் விதிக்கப்படலாம். மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் செலவினங்களுக்காக, அவர்களது பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்கு பொறுப்பான நபர்கள் மாத உதவி தொகையை முழுமையாக, அல்லது, தேவையை பொறுத்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கவும் சட்டத்தில் இடமுண்டு.  உத்தரவை மதிக்காவிட்டாலோ அல்லது மூத்த குடிமக்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பான நபர்கள், மூத்த குடிமக்களை கைவிட்டால், அத்தகைய நபர்களுக்கு மூன்று மாதம் சிறை தண்டனை அல்லது 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கவும்; இரண்டும் சேர்த்து விதிக்கவும் கூட சட்டத்தில் இடமுண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை