மனிதனின் அடையாளம் செயல் மட்டுமே
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க கிளை துவக்க விழா பல்லடத்தில் நடந்தது. இயற்கை ஆர்வலர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். மாநில செயற்குழு நிர்வாகி ஈஸ்வரன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் குமார், எழுத்தாளர் கோவை சதாசிவம், கவிஞர் கவியுழவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.எழுத்தாளர் லட்சுமி காந்தன் பேசியதாவது: ஒரு மனிதனின் அடையாளம் என்பது அவன் பெயரோ, உடையோ அல்லது அவன் வாழும் ஊரோ அல்ல. ஒருவனது செயல் மட்டுமே அவனது அடையாளமாக இருக்கும். பல ஆயிரம் பேர் வசிக்கும் ஒரு நகரத்தின் மனசாட்சியாக நாம் இருக்க வேண்டும்.இந்த உலகில் இருந்து நாம் மறைந்து விடலாம். ஆனால், நமது எழுத்துகள் மறையாது. திருவள்ளுவர், திருக்குறளை எழுதியது எத்தனை நுாற்றாண்டுகள் என்றே தெரியவில்லை. அவர் இல்லை என்றாலும், அவர் எழுதிய திருக்குறள் இன்றும் உலக அளவில் பேசப்பட்டு வருகிறது. ஒரு படைப்பு என்பது எதைப் பற்றி பேச வேண்டும் என்பது முக்கியம்.கைதட்டினோம், சாப்பிட்டோம், புத்தகம் வெளியிட்டோம் என்பதல்ல, எழுத்தாளர்களின் கடமை. பாவப்பட்ட வாழ்க்கை மீது கோவப்படும்படி எழுதுவதும், பேசுவதும், வாழ்வின் மீது நேசம் கொண்டவர்களின் கனவை உணர்த்துவதுமாக இருக்க வேண்டும். ரம்மியம் வாழ்க்கையில் எவ்வளவு தேவையோ அதுபோல் ரவுத்திரமும் தேவை என்பதை உணர்த்துவதாக இருக்க வேண்டும் நமது எழுத்துகள்.