உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பின்னலாடை ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு கட்டணம் இழுத்தடிப்பு தொடர்கிறது

பின்னலாடை ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு கட்டணம் இழுத்தடிப்பு தொடர்கிறது

திருப்பூர்; ''குறு, சிறு நிறுவனங்களுக்கான, 45 நாட்களுக்குள் சேவை கட்டணத்தை செலுத்தும் நடைமுறையில், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கணக்கு பதிவு செய்யும் நடைமுறை அவசியம்'' என, தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். திருப்பூரில் இயங்கும் நிறுவனங்களில், 80 சதவீதம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்; இவை 'ஜாப் ஒர்க்' கட்டணம் பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.''நிட்டிங் மற்றும் சாய ஆலைகள் துவங்கி, காஜா பட்டன் வைக்கும் பட்டறைகள் வரை, அனைவருக்கும், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், பாக்கி வைத்து, தொகையை வழங்குகின்றன.திருப்பூரில் இயங்கும் 100 நிறுவனங்கள் மட்டுமே, அனைத்து வகை, 'ஜாப் ஒர்க்' சேவைகளையும் ஒருங்கிணைந்த வளாகத்தில் வைத்துள்ளன. மற்ற நிறுவனங்கள், பிற நிறுவனங்களை சார்ந்தே இயங்கி வருகின்றனர்.மூன்று மாதங்கள் வரை இழுத்தடிக்கப்பட்டு, அதற்கு பிறகே கட்டணத்தை வசூலிக்க வேண்டியுள்ளது. இதனால், அவசர இயக்க செலவுகளுக்கு, கடன் பெற்றே நிறுவனங்கள் இயங்க வேண்டிய நிலை உள்ளது. இருப்பினும், சரியான நேரத்தில், 'ஜாப் ஒர்க்' கட்டணம் கிடைக்காத போது, மற்றொரு கடனை வாங்கி, வங்கிக்கடனை அடைக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது'' என்கின்றனர் 'ஜாப் ஒர்க்' சேவை மேற்கொள்ளும் நிறுவனத்தினர். திருப்பூரில் மட்டுமின்றி ஒவ்வொரு தொழில்களிலும் இத்தகைய நிலையே தொடர்கிறது. இதன்காரணமாக, மத்திய அரசு, 45 நாட்களுக்குள் சிறு, குறு நிறுவனங்களுக்கான கட்டணத்தை வழங்க வேண்டும். அப்படி வழங்காமல் இருந்தால், நிலுவை தொகை லாபமாக கருதி, வருமான வரி விதிக்கப்படுமென அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இருந்து, முழுமையாக அமலுக்கு வந்துள்ளது. மத்திய அரசு அறிவித்த பிறகும், ஓராண்டாகவே, 45 நாட்களில் கட்டணத்தை செலுத்தும் அறிவிப்பு, நடைமுறைக்கு வரவில்லை என்பதே, 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

கடிவாளம் அவசியம்

குறு, சிறு தொழில்களை பாதுகாக்கும் நோக்கத்தில், 45 நாட்களுக்குள் அந்நிறுவனங்களுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என, அரசு சட்டம் இயற்றியது. இருப்பினும், பெரும்பாலான நிறுவனங்கள், அந்த சட்டத்தை மதிப்பதாக தெரியவில்லை. சட்டமாக வந்த பிறகும், 45 நாட்களுக்குள் 'பேமென்ட்' கிடைப்பதில்லை. மார்ச் மாதம் பார்த்துக்கொள்ளலாம் என, வழக்கம் போல் இழுத்தடிக்கின்றனர்; இந்நிலை மாற வேண்டும். ஜி.எஸ்.டி., வரி தொடர்பான கணக்கை, மாதாமாதம் பதிவு செய்வது போல், 45 நாட்கள் 'பேமென்ட்' செய்ததையும், 90 நாட்களுக்கு ஒருமுறை பதிவு செய்வது போல் கடிவாளம் போட வேண்டும். அப்போதுதான், அரசு அறிவித்த உத்தரவு, நாடு முழுவதும் சீராக நடைமுறைக்கு வரும். குறு, சிறு நிறுவனங்களும் பாதுகாக்கப்படும்.- மணி, தலைவர், திருப்பூர் தொழில் கூட்டமைப்பு - டிப்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை