உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எரிசனம்பட்டி ஒன்றியம் உருவாக்கும் திட்டம். கானல் நீராகிறது!: அதிக ஊராட்சிகளால் நிர்வாகத்தில் சிரமம்

எரிசனம்பட்டி ஒன்றியம் உருவாக்கும் திட்டம். கானல் நீராகிறது!: அதிக ஊராட்சிகளால் நிர்வாகத்தில் சிரமம்

உடுமலை: நகராட்சியுடன் சில ஊராட்சிகள் இணைக்கப்பட்டு, எல்லை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், உடுமலை ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாக பிரிக்கும் திட்டம், நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில், தற்போது, 38 ஊராட்சிகள் உள்ளன; இந்த ஒன்றிய ஊராட்சிகள், 203 சதுர கி.மீ., பரப்பில் அமைந்துள்ளது.அதிக ஊராட்சிகள், சதுர கி.மீ., பரப்பில் அமைந்துள்ளதால், ஒன்றியத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என, நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.ஒன்றிய அலுவலகம், உடுமலையில் அமைந்துள்ளதால், தொலைதுார கிராம மக்கள் வந்து செல்ல சிரமம் நிலவுவதுடன், நிதி ஒதுக்கீட்டிலும் சில பிரச்னைகள் ஏற்படுகிறது.எனவே ஒன்றியத்தை இரண்டாக பிரித்து எரிசனம்பட்டியை தலைமையிடமாகக்கொண்டு, புதிய ஒன்றியம் உருவாக்க முதன்முறையாக கடந்த, 2007ல் கருத்துரு அனுப்பினர். பின்னர், 2014ல், திருத்தப்பட்ட கருத்துரு அரசுக்கு அனுப்பபட்டது.கருத்துருவில், புதிதாக உருவாக்கப்படும் ஒன்றியத்தில், 53 ஆயிரத்துக்கும் அதிக மக்கள் தொகை இருக்கும்.மேலும், செல்லப்பம்பாளையம், தேவனுார்புதுார், புங்கமுத்துார், ராவணாபுரம், உடுக்கம்பாளையம், எரிசனம்பட்டி, பெரியபாப்பனுாத்து, தின்னப்பட்டி, கொடுங்கியம், அந்தியூர், பூலாங்கிணறு, கணபதிபாளையம், ஆர்.வேலுார், பெரியவாளவாடி, வடபூதிநத்தம், ரெட்டிபாளையம், தீபாலபட்டி, ஜிலோபநாயக்கன்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளை இணைத்து, எரிசனம்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய ஒன்றியம் உருவாக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

கருத்துக்கேட்பு கூட்டம்

இது குறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டதுடன், உடுமலை ஒன்றியம் சார்பில், தீர்மானம் நிறைவேற்றியும் அரசுக்கு அனுப்பி வைத்தனர். நீண்ட காலமாகியும் புதிய ஒன்றியம் உருவாக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.தற்போது உடுமலை நகரின் அருகிலுள்ள சில ஊராட்சிகளை இணைத்து, நகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அதையொட்டி, உடுமலை ஒன்றிய சீரமைப்பையும் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: எரிசனம்பட்டியை தலைமையிடமாகக்கொண்டு புதிய ஒன்றியம் உருவாக்கப்படும் என நீண்ட காலமாக தெரிவித்து வருகின்றனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.புதிய ஒன்றியம் அமைந்தால், மேற்குப்பகுதி ஊராட்சிகளில் வளர்ச்சி அதிகரிக்கும். பல்வேறு புதிய கட்டமைப்பு வசதிகள் அரசால் ஏற்படுத்தப்படும் வாய்ப்புள்ளது. ஒன்றிய நிர்வாக பணிகளும் மேம்படும்.எரிசனம்பட்டி ஒன்றியத்தை உருவாக்குவதற்காக, ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்குறுதி அளிக்கும், அரசியல் கட்சியினரும் இப்பிரச்னை குறித்து கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது.இவ்வாறு, தெரிவித்தனர்.நிர்வாக காரணங்களுக்காக உடுமலை ஒன்றியத்தை பிரித்து, புதிய ஒன்றியம் உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அரசுக்கும் தொடர்ந்து கோரிக்கை மனு அனுப்பி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை