பட்டா இங்கே... இடம் எங்கே?
பொங்கலுார்: பொங்கலுார், வடமலை பாளையம் ஊராட்சி புத்தரச்சலில் நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளது. அங்கு வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா அரசால் வழங்கப்பட்டுள்ளது. பட்டாவை வழங்கிவிட்டு சர்வே செய்து வீட்டுமனைகளை ஒதுக்கித் தரவில்லை.இதனால், பயனாளிகள் அங்கு வீடு கட்டி குடியேற முடியவில்லை. இட நெருக்கடியால் அப்பகுதி மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த பயனாளிகள் தாசில்தார், கலெக்டர் என பல்வேறு தரப்பு அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.நிலத்தை அளந்து தராமல் பட்டாவை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வது என்று அப்பகுதி மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.