சாலையும் -- சாக்கடையும் இல்லை; மக்கள் கஷ்டம் தீரவில்லை
திருப்பூர்; திருப்பூர், காந்திநகர் அருகிலுள்ள பிரியங்கா நகர் வார்டு 1 பகுதியில் சரியான ரோடு மற்றும் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், அப்பகுதி மக்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அப்பகுதி மக்கள் கூறியதாவது: கடந்த, 20 ஆண்டுகளாக ரோடு வசதி அமைக்கப்படவில்லை. சாக்கடை கால்வாய் வசதியும் இல்லாததால் மழைக்காலங்களில் பெரிதும் சிரமப்படுகிறோம். மேலும் இப்பகுதியில் புதிதாக நீர்க்குழாய் அமைக்கப்பட்டது. அதன் தரம் குறைவாக இருக்கிறது. அடிக்கடி பழுதாகி ரோட்டில் நீர் செல்கிறது. இது பற்றி மாநகராட்சியிடம் எவ்வளவோ சொல்லி விட்டோம். அரசிடமிருந்து இன்னும் நிதி பெறப்படவில்லை, நிதி கிடைத்ததும் சரி செய்கிறோம் என்று கூறுகிறார்கள். தினமும் நாங்கள் சிரமப்படுகிறோம். எங்களுக்கு அரசு உதவ வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.