தித்தித்த தலை தீபாவளி
மறக்க முடியாத தனித்துவம்திருப்பூரைச் சேர்ந்த ரித்வின் சிவப்பிரகாஷ் - கிருபா நந்திதா ரித்வின் புதுமணத் தம்பதி. ரித்வின் சிவப்பிரகாஷ், ஏற்றுமதி நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர். மனைவி மற்றொரு நிறுவனத்தின் பங்குதாரர். தாராபுரம் ரோடு சகஜபுரம் பகுதியில் உள்ள வீட்டில் நேற்று தங்கள் தலைதீபாவளியைக் கொண்டாடினர்.ரித்வின் சிவப்பிரகாஷ் கூறியதாவது:கடந்த செப்., மாதம் எங்கள் திருமணம் நடந்தது. பெற்றோர் உள்ளிட்ட உறவுகளுடன் தீபாவளியைக் கொண்டாடியுள்ளேன். இது தலை தீபாவளி என்பதால், மனைவியின் பெற்றோர் வீட்டில் புதிய உறவுகளுடன் பண்டிகையை கொண்டாடும் மகிழ்ச்சியான புது அனுபவமாக அமைந்தது. மனைவி தரப்பு உறவினர்களுடன் நெருக்கமான அறிமுகமும், பண்டிகை கொண்டாட்டத்தையும் பகிர்ந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது. இந்த தலை தீபாவளி கொண்டாட்டத்தை மறக்க முடியாத, தனித்துவமான அனுபவம் என்று சொல்லலாம். எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும் செம்மைப்படுத்தும் விதமான பண்டிகையாக இது அமைந்துள்ளது.நொடிப்பொழுதும் மனமகிழ்ச்சிமனோஜ் குமார் - நந்தினி:பூமலுார், பள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் மனோஜ்குமார், 28. நுால் வர்த்தகம் புரிகிறார். மனைவி நந்தினி, 24; தபால் அலுவலக ஊழியர். திருமணமாகி இரண்டு மாதங்களாகிறது.மனோஜ்குமார் கூறியதாவது:இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டாக பழகினோம்; பெற்றோர் சம்மதத்துடன் கடந்த செப்., மாதம் திருமணம் நடந்தது. காதலர்களாக இருந்து கணவன் மனைவியான பின், முதல் பண்டிகை இது. அதுவும் சிறப்பு மிக்க தீபாவளி பண்டிகை. தலை தீபாவளியாக அமைந்துள்ளது. புத்தாடை, பட்டாசு, பலகாரம் இவற்றுடன் உள்ளம் நிறைய மகிழ்ச்சியும், ஆனந்தமும் பொங்க தலை தீபாவளியை ஒவ்வொரு ெநாடியையும் மனமகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம்.எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவிக்கிறோம்.வண்ணமயமான நம்பிக்கைஅவிநாசியைச் சேர்ந்தவர் டேனியல்; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஷீபா; சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இந்தாண்டு 'தலை தீபாவளி'.டேனியல் - ஷீபா ஆகியோர் கூறியதாவது:தீமையை நன்மை வென்றது என்பதே, தீபாவளி பண்டிகை உணர்த்தும் கருத்து. பகைமை, பிரிவினைவாதம், சுயநலம், கவலை, பயம், வெறுமை, கோபம் போன்ற தீமைகள் களையப்பட வேண்டும். அன்பு, சகிப்புத்தன்மை, பிறர் நலம், மன நிறைவு, தன்னம்பிக்கை, நம்மிடம் இருப்பதை கொண்டு மகிழ்ந்திருத்தல், பொறுமை போன்ற நன்மைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற கருத்தை உள்வாங்கி, தீபாவளியைக் கொண்டாடுகிறோம். இனிப்பு பரிமாறுவது போன்று, இனிய உறவுகளை பரிமாறிக் கொள்ள வேண்டும். வாண வெடி போன்று நம் வாழ்க்கையும், வண்ணமயமாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் எண்ணம்.வரிசையாக வாழ்த்து மத்தாப்'பூ'கார்த்திகேயன் - சவுந்தர்யா தம்பதி.சேவூரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 30. பில்டிங் மெட்டீரியல் டீலர். தெக்கலுாரைச் சேர்ந்த சவுந்தர்யா, 28. கல்லுாரி படிப்பு முடிந்து ஆன்லைன் டிரேடிங் மூலம் சுய தொழில் முனைவோராக உள்ளார். கடந்த செப்., மாதம் திருமணம் நடந்தது.தலைதீபாவளியை தெக்கலுாரில் சவுந்தர்யாவின் வீட்டில் கொண்டாடிய புது மணத் தம்பதியர் கூறியதாவது:திருமணம் நடந்த இரண்டு மாதத்துக்குள் தீபாவளி பண்டிகை வந்தது, எங்கள் மகிழ்ச்சியை மேலும் இரட்டிப்பு ஆக்கியுள்ளது. திருமணம் முடிந்து குறுகிய நாளில் வந்த தலை தீபாவளி மனம் நிறைந்த மகிழ்ச்சியை அள்ளித் தந்துள்ளது. குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என பல தரப்பிலிருந்தும் தொடர்ந்து வாழ்த்துகள் வந்த வண்ணம் உள்ளது. அனைவருக்கும் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம்.