மழையால் தக்காளி சாகுபடி பாதிப்பு; வரத்து குறைவால் விலை உயர்வு
உடுமலை; தொடர் மழை, செடிகள் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களினால், உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளதால், விலை உயர்ந்து வருகிறது.உடுமலை, மடத்துகுளம், குடிமங்கலம் பகுதிகளில், 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளையும் காய்கறிகள், உடுமலை சந்தைக்கு கொண்டு வந்து ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது.கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், செடிகள் மற்றும் பழங்கள் பாதித்துள்ளன. இதனால், சந்தைக்கு தக்காளி வரத்து, பெருமளவு குறைந்துள்ளது.தினமும், 10 ஆயிரம் பெட்டிகள் மட்டுமே வரத்து உள்ளதால், விலை உயர்ந்து வருகிறது. கடந்த இரு வாரங்களாக, 14 கிலோ கொண்ட பெட்டி, ரூ.250 வரை மட்டுமே விற்று வந்த நிலையில், இரு நாட்களாக விலை உயர்ந்து வருகிறது. நேற்று, ஒரு பெட்டி, ரூ. 350 வரை விற்பனையானது.விவசாயிகள் கூறியதாவது: தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள தக்காளியில், நோய் தாக்குதல், தொடர் மழையால், செடிகள் பாதித்துள்ளதோடு, காய்களும் பாதித்துள்ளன. வழக்கமாக கிடைக்கும் தக்காளி மகசூல் பாதித்து, சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது.இதனால், விலை உயர்ந்து வருகிறது. தற்போது தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதித்துள்ளனர்.தென் மேற்கு பருவ மழையை தொடர்ந்து, தற்போது தக்காளி நடவு துவங்கியுள்ளது. இந்த தக்காளி வருவதற்கு, இரு மாதம் உள்ளதால், தொடர்ந்து விலை உயர வாய்ப்புள்ளது.இவ்வாறு, தெரிவித்தனர்.