மங்கலம் ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி; கமிஷனரிடம், அ.தி.மு.க.,வினர் மனு
திருப்பூர்; மங்கலம் ரோட்டில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து சிக்கல்களுக்கு தீர்வு ஏற்படுத்த வலியுறுத்தி திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.இதுதொடர்பாக, திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியுள்ளதாவது:கே.வி.ஆர்., நகர் வழியாக பஸ் ஸ்டாண்டிலிருந்து முருகம்பாளையம், இடுவம்பாளையம் செல்லும் மினி பஸ்கள் கே.வி.ஆர்.,நகர், கே.ஆர்.ஆர்., தோட்டம் பகுதியில் அமைந்துள்ள நகர்நல மருத்துவம் மையம் வழியாக செல்ல வழித்தட அனுமதி பெற்றுள்ளது. ஆனால், அவ்வழியாக பஸ்கள் செல்வதில்லை. இதனால், கர்ப்பிணிகள், முதியோர் என பலரும் பஸ் இல்லாமல் சிரமப்படுகின்றனர்.கே.வி.ஆர்., நகர் பிரதான ரோட்டில் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, தனியார் பள்ளி உள்ளிட்ட பள்ளிகள் உள்ளது. அவ்வழியாக செல்லும் மினி பஸ்கள் அவசியம் வேக கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க ஆவண செய்ய வேண்டும்.மினி பஸ் டிரைவர்கள் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்துகின்றனர். குறிப்பாக, குமரன் மகளிர் கல்லுாரி ரோட்டில் காலை, மாலை நேரங்களில் மாணவியரை ஏற்றி செல்ல போட்டி போட்டு கொண்டு, மினி பஸ்கள் ரோட்டை அடைத்து நிறுத்தி, மக்களுக்கு இடையூறு செய்கின்றனர்.எனவே, மங்கலம் ரோட்டில் ஏற்பட்டுள்ள இதுபோன்ற போக்குவரத்து இடர்பாடுகளை சீரமைக்க போலீசாரை நியமிக்க வேண்டும். மினி பஸ் இயக்கத்தை கண்காணித்து முறைப்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.