வெட்டப்படும் மரங்கள்; தொடரும் அத்துமீறல்
திருப்பூர்; காங்கயம் சுற்றுப் பகுதியில் பெரும்பாலான இடங்கள் வேலிக் காடுகளாகவும், விளை நிலங்களாகவும் உள்ளன. பல்வேறு கிராமப் பகுதிகளில் இதுபோன்ற நிலங்களில், கால்நடை வளர்ப்போர், தங்கள் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாகவும் பயன்படுத்துகின்றனர். இது போன்ற பசும் புல் மற்றும் இலை தழைகள் விளைந்து காணப்படும் நிலம் ஏராளமாக உள்ளது. கிராம பகுதிகளில் உள்ள ரோடுகளில், இரு புறங்களிலும் ஏராளமான மரங்கள் வளர்ந்து பசுமையாக காட்சியளிக்கின்றன.ரோட்டோரங்களில் விளைந்து வளர்ந்து காணப்படும் மரங்கள் பல இடங்களில் வெட்டி அகற்றப்பட்டுள்ளது. மரங்களை வெட்டியாது யார் என்பதோ, அனுமதி அளித்தது யார் என்றும் தெரியவில்லை. இது, இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் இந்த செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. இது போல் வெட்டப்படும் மரங்களால், சுற்றுப்பகுதியில் பசுமை மறைந்து, வெப்பநிலை அதிகரிக்கிறது. மேலும், நிலத்தில் ஈரப்பதம் குறையவும், தேவையற்ற முட்புதர்கள் விளையும் வகையிலும் இந்த இடங்கள் மாறிவருகின்றன என அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அவ்வகையில், வீரணம்பாளையம் ஊராட்சி, சாம்பவலசு பகுதியில் மரத்தை யாரோ விஷமிகள் வெட்டியுள்ளனர்.இவ்வாறு வெட்டப்படும் மரங்களை உரிய அனுமதியின்றி வெட்டுவதாகவும், வருவாய்துறையினர், ஊராட்சி நிர்வாகங்கள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் பசுமை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.