உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மலையேற்றம் புது அனுபவம்... புத்தாக்கம் கிடைக்கும்!

மலையேற்றம் புது அனுபவம்... புத்தாக்கம் கிடைக்கும்!

இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தவும், வனப்பகுதியை ஒட்டியுள்ள உள்ளூர் மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தவும், வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்புக்கு வலுசேர்க்கும் விதமாக, மலையேற்ற திட்டம் தமிழகத்தில் துவங்கப்பட்டுள்ளது.மலையேற்றம் செய்வதில், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த தனி இணையதளம் www.trektamilnadu.comஉருவாக்கப்பட்டுள்ளது. கடந்த அக்., 24ல் துவங்கப்பட்ட இத்திட்டத்தில், மலையேற்றம் மேற்கொள்வோர், 100 சதவீத இணையதள வழி பணப்பரிவர்த்தனை செய்து நுழைவுச்சீட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மலையேற்றம் செல்ல, 18 வயது நிறைந்திருக்க வேண்டும். 18 வயதுக்கு உட்பட்டவர்கள் தங்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒப்புதல் கடிதத்துடன் மலையேற்றம் செய்யலாம். பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆர்வம் இருந்தால் அவர்களின் பெற்றோர், பாதுகாவலரின் துணையுடன் எளிதான மலையேற்ற பாதையில் செல்ல அனுமதிக்கப்படுவர்.கோவை, நீலகிரி திருப்பூர் மாவட்டத்தில் சின்னாறு சோதனைச்சாவடி அடுத்த கூட்டாறு மலையேற்றத்துக்கான இடமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மலையேற்ற பயணம் எளிமை, மிதமானது, கடினமானது என மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில், 124 மலையேற்ற இடங்கள் வனத்துறையால் கண்டறியப்பட்டாலும், இயற்கை ஆர்வலர்களின் பாதுகாப்பு கருதி, 14 மாவட்டங்களில், 40 இடங்களில் மட்டும் மலையேற்ற பயணத்திட்டத்தை துவக்கி உள்ளோம். கடந்த வாரம், 300 - 400 பேர் ஆர்வமுடன் டிரக்கிங் சென்று திரும்புகின்றனர். ஆர்வமுள்ளவர் கூடுதல் விபரங்களை www.trektamilnadu.comஎன்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். தற்போதைக்கு மூன்று முதல், 20 கி.மீ., துாரம் மலையேற்ற பயணம் அழைத்துச் செல்லப்படுகிறது.

- வனத்துறை அலுவலர்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை