உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காச நோய்க்கு காலம் கடத்தாமல் சிகிச்சை  அவசியம்!

காச நோய்க்கு காலம் கடத்தாமல் சிகிச்சை  அவசியம்!

காசநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச், 24ம் தேதி உலகக் காசநோய் தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஜெர்மனி விஞ்ஞானி, 1882, மார்ச், 24ல் இந்நோய்க்கு மருந்து கண்டுபிடித்த, டாக்டர் ராபர்ட்கொக் (Robert Koch) அர்ப்பணிப்பை நினைவு கூர்வதற்காக, இந்நாளில், காசநோய் தடுப்புக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

நோயின் அறிகுறி

காசநோய் கிருமி காற்றின் மூலம் பரவக்கூடிய தொற்றுநோயாகும். ஒருவருக்கு இரண்டு வாரத்துக்கு மேல் சளியுடன் கூடி இருமல், மாலை நேரங்களில் தொடர்ந்து காய்ச்சல், பசி, துாக்கமின்மை , எடை குறைதல், இருமும் போது நெஞ்சுவலி ஏற்படுவது இந்நோய்க்கான அறிகுறிகள்.இந்த நோய் சுவாச உறுப்பான நுரையீரை அதிகமாக பாதிக்கிறது. காசநோய் தாக்கப்பட்டவர் இருமும்போது வெளியேறும் சிறுசிறு சளி துளிகள் மூலம் அருகில் உள்ளவர்களுக்கு பரவும் வாய்ப்புள்ளது. அறிகுறி இருப்பவருக்கு மருத்துவ பரிசோதனை, சளி பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்

கவனம் தேவை

நோய் கண்டறியப்பட்டவர்கள், இருமும் போது வாயை கட்டாயம் துணியால் மூடிக்கொள்ளவேண்டும்; கண்ட இடங்களில் எச்சில், சளியை துப்பக்கூடாது. ஒரு நுரையீரல் காசநோய் தொற்று பாதிக்கப்பட்டவர் மூலம், பத்து பேருக்கு பரவும் வாய்ப்புள்ளது.

மருந்து முக்கியம்

ஒருவருக்கு காசநோய் கண்டறியப்பட்டால், அவர் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளும் மருந்துகளே அவர் நோயில் இருந்து மீண்டு வர முழுமையாக உதவுகிறது. முதல்நிலை காசநோய்க்கான சிகிச்சை, ஆறு மாதங்கள் தொடர்ச்சியாகவும், இரண்டாம் நிலை காசநோய்க்கான சிகிச்சை, ஒன்பது மாதங்களும் மேற்கொள்ளப்படுகிறது. 18 மாதம் தொடர்ச்சியாக மருந்து எடுத்துக்கொள்பவர் முழுமையாக நோயில் இருந்து விடுபட முடியும்.திருப்பூர் மாவட்ட காசநோய் தடுப்பு திட்ட அலுவலர் தீனதயாளன் கூறியதாவது:நம் மாவட்டத்தில் காசநோய் கிருமியை கண்டறிய, 61 நுண்ணோக்கி மையங்களும், 10 கண்காணிப்பு மையங்களும் செயல்பட்டு வருகிறது. 2023 டிச., மாத கணக்கீட்டின் படி, மாவட்டத்தில், 2,336 பேர் காசநோயாளிகளாக கண்டறியப்பட்டு, மருந்து சாப்பிட்டு வருகின்றனர். இவர்களில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் முதல் நிலையிலும், மற்றவர்கள் இரண்டாம் நிலையிலும் உள்ளனர்.காசநோய் குணப்படுத்த கூடியது தான். அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, தாலுகா அளவிலான மருத்துவமனையில் இந்நோய் கண்டறிவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்துக்கென வழங்கப்பட்ட நோய் கண்டறியும் எக்ஸ்ரே வாகனம் கிராமங்கள் தோறும் தொடர்ந்து பயணித்து வருகிறது. கடந்த ஓராண்டில், 11 ஆயிரத்து, 117 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில், 51 பேருக்கு நோய் கண்டறியப்பட்டுள்ளது.தங்களுக்கு அறிகுறி இருந்தால் தயங்காமல் சோதனை செய்து கொள்ளலாம். மாத்திரை மூலம் குணமடைய முடியும்.தெரிந்தும் காலம் கடத்தினால், அனுமதியாகி சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்படும் என்பதை உணர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.(இன்று உலக காசநோய் தடுப்பு தினம்)ஒருவருக்கு காசநோய் கண்டறியப்பட்டால், அவர் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளும் மருந்துகளே அவர் நோயில் இருந்து மீண்டு வர முழுமையாக உதவுகிறது

மிஸ்டுகால் கொடுங்க...

காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உதவித்தொகை திட்டத்தின் கீழ், மாதம், 500 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்நோய் குறித்து அறிய, 1800 11 6666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 95669 09090 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுத்தால், மாவட்ட காசநோய் தடுப்பு பிரிவு அலுவலர்கள் உங்களை அழைத்து விரிவான காசநோய் குறித்த மருத்துவ ஆலோசனைகளை வழங்குவர். திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில், மாவட்ட காசநோய் தடுப்பு மையம் செயல்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ