உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதியில்...  நீக்க வாய்ப்பு! : வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் 73 ஆயிரம் பேர்

உடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதியில்...  நீக்க வாய்ப்பு! : வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் 73 ஆயிரம் பேர்

உடுமலை: தேர்தல் கமிஷன் உத்தரவு அடிப்படையில், உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இரு தொகுதிகளிலும், 73 ஆயிரம் வாக்காளர்கள் வரை நீக்க வாய்ப்புள்ளது. இது குறித்து பட்டியல் தயாரித்து, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், அரசியல் கட்சி முகவர்கள் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் கமிஷன், ஜன., 2026 தகுதி நாளாகக்கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்ள கால அட்டவணை வெளியிட்டுள்ளது. அதன்படி, உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள், கடந்த, அக்., 28ல் துவங்கி. வரும், பிப்.,7 வரை நடக்கிறது. வாக்காளர்கள் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை ஒப்படைக்க, வரும், 11ம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இரு தொகுதிகளிலும் உள்ள வாக்காளர்களுக்கு, இரட்டைப்பிரதியில் படிவம் அச்சடித்து வழங்கப்பட்டு, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களால், கடந்த மாதம் 4ம் தேதி முதல், வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்காளர்களின் வீடுகளுக்குச்சென்று மீள பெறப்பட்டு, இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. உடுமலை தொகுதி உடுமலை தொகுதியில், பொள்ளாச்சி தாலுகாவில், 1 முதல், 132 வரை உள்ள பாகங்களில், ஒரு லட்சத்து, 23 ஆயிரத்து, 389 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஒரு லட்சத்து, 1,496 பேருக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. 8,930 பேர் இடமாற்றம், 9,217 பேர் இறப்பு என, 18,147 பேர் நீக்கப்பட உள்ளனர். உடுமலை தாலுகாவில், 133 முதல், 236 வரையிலான பாகத்தில், 92,162 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 75,491 பேருக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. 3,998 பேர் நிரந்தரமாக இடமாற்றம், 5,721 பேர் இறப்பு என கண்டறியப்பட்டுள்ளது. உடுமலை நகரில், 237 முதல்,294 வரையிலான பாகத்தில், 56 ஆயிரத்து, 466 வாக்காளர்கள் உள்ளனர். 39 ஆயிரத்து, 56 பேருக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 11 ஆயிரத்து, 80 பேர் இடமாற்றம், 4,338 பேர் இறப்பு என கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு, உடுமலை தொகுதியில், மொத்தமுள்ள, 294 ஓட்டுச்சாவடிகளில், 2 லட்சத்து, 72 ஆயிரத்து, 017 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். 2 லட்சத்து, 16 ஆயிரத்து, 043 பேருக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 24 ஆயிரத்து, 8 பேர் இடமாற்றம், 19 ஆயிரத்து, 276 பேர் இறப்பு என, 43 ஆயிரத்து, 284 பேர் நீக்கம் செய்ய வாய்ப்புள்ளது. இது குறித்த பட்டியல், ஓட்டுச்சாவடி வாரியாக, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், அரசியல் கட்சியினரின் பி.எல்., 2 ஆகியோரிடம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் உரிய ஆய்வு செய்து, உரிய அறிக்கை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மடத்துக்குளம் தொகுதி மடத்துக்குளம் தொகுதியில், 287 ஓட்டுச்சாவடிகளில், 2 லட்சத்து, 43 ஆயிரத்து, 478 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 2 லட்சத்து, 42 ஆயிரத்து, 917 வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டன. 2 லட்சத்து, 8 ஆயிரத்து, 514 வாக்காளர் படிவங்கள் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இத்தொகுதியிலும், இறப்பு, இடமாற்றம், இரட்டை பதிவு என, மடத்துக்குளம் தொகுதியில், 30 ஆயிரம் வாக்காளர்கள் வரை நீக்கப்பட வாய்ப்புள்ளது. இது குறித்த பட்டியல் தயாரித்து, மீண்டும் ஆய்வு செய்து, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் முகவர்களுக்கு வழங்கப்பட்டு, உரிய ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது : ஓட்டுச்சாவடி வாரியாக படிவங்கள் வழங்கப்பட்டு, ஓட்டுச்சாவடி அலுவலர்களால் வீடுகள் தோறும் வினியோகம் செய்யப்பட்டது. நிரப்பிய படிவங்கள் மீண்டும் பெறப்பட்டு, இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதில், படிவங்கள் பெற வீடுகளில் இல்லாதவர்கள், நிரந்தமாக இடம் மாறியவர்கள், இறப்பு, இரு தொகுதிகளில் இரட்டை பதிவு என அடையாளம் காணப்பட்ட வாக்காளர்கள் குறித்த பட்டியல், ஓட்டுச்சாவடி வாரியாக தயார் செய்யப்பட்டு, அரசியல் கட்சிகளின் முகவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்து, இருப்பது உறுதி செய்தால், மீண்டும் ஆய்வு செய்து இணைக்கப்படும். இதன் வாயிலாக, தீவிர திருத்த பணியின் போது, ஒரு வாக்காளர்கள் கூட விடுபடாமல் இணைக்க முடியும். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் போதுதான், தொகுதியில் மொத்த வாக்காளர்கள், தீவிர திருத்த பணியின் போது, நீக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கை தெரியவரும். இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ