மகப்பேறு மையம் முன் உவ்வே; அரசு மருத்துவமனையில் அவலம்
திருப்பூர் : திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, மகப்பேறு மருத்துவ மைய வளாகம் முன், சிலாப் உடைந்து, கழிவுநீர் வெளியேறுவதும், துர்நாற்றம் வீசுவதும் தொடர்கதையாக உள்ளது. பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்வதே இல்லை.திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையாக மாற்றப்பட்டு, குழந்தைகள், பொது, கண், காது, மூக்கு, ஆண்கள் பிரிவு, தொடர்சிகிச்சை தர வேண்டியவர்கள், பல், எலும்பு என பல்வேறு பிரிவுகள் பிரிக்கப்பட்டு, புதிய வளாகத்தில் செயல்படுகிறது. நிர்வாக வசதி மற்றும் வந்து செல்வதற்கு எளிதாக இருக்கும் என்பதால், பிரசவ வார்டு, பெண்கள் பிரிவு, மகப்பேறு மருத்துவ மையம் தனியே பழைய கட்டடத்தில் ஒருங்கிணைந்த நான்கு தளத்தில் செயல்படுகிறது.இவ்வளாகத்தின் முன்புறம் பாதாள சாக்கடை, பாத்ரூம் கழிவுநீர் குழாய்கள் பயணிக்கிறது. இவற்றில் அடைப்பு ஏற்பட்டு, சிலாப் கற்கள் உடைந்து கழிவுநீர் வெளியேறி அப்படியே ஓடுகிறது. இதனை மிதித்தபடியே மகப்பேறு மைய வளாகத்துக்கு பலரும் வந்து செல்கின்றனர். சுகாதாரம் கேள்விக் குறியாக உள்ளது. இவ்வாறு நாள் கணக்கில் கழிவுநீர் வெளியேறி, மகப்பேறு மையம் முன்புறம் மரங்கள் வளர்க்கப்பட்டுள்ள இடத்தில் தேங்கி நிற்கிறது. இதனால், கொசுக்கள் மற்றும் ஈக்கள் தொல்லை அதிகமாகிறது. இது புதியதல்ல...
மகப்பேறு மருத்துவ மையம் முன்புறம் அடிக்கடி கழிவுநீர் வெளியேறு வதும், தேங்கி நிற்பது தொடர்கதையாகவே உள்ளது. மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இருந்து, புகார் தெரிவித்தும், பொதுப் பணித்துறையினர் அலட்சியமாகவே உள்ளனர். 500க்கும் அதிகமான நோயாளிகள், 100க்கும் மேற்பட்ட தாய்மார்கள் தங்கி சிகிச்சை பெறும் மகப்பேறு மையத்தின் நிலை இவ்வாறு உள்ளது. எனவே, கலெக்டர் தலையிட்டு கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண உத்தரவிட வேண்டும்.