கால்நடை மருத்துவ கல்லுாரி விளையாட்டு போட்டி
உடுமலை, ; தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை., கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி வளாகத்தில் நடந்தது.போட்டிகளில், 9 கல்லுாரிகளைச்சேர்ந்த, 122 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். டேபிள் டென்னிஸ், கேரம் மற்றும் சதுரங்க போட்டி நடத்தப்பட்டது.போட்டிகளை உடுமலை கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் மணிவண்ணன் துவக்கி வைத்தார். தேனி கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் பொன்னுதுரை சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.போட்டிகளின் நிறைவு விழாவில், கோவை மாவட்ட தலைமை வன பாதுகாவலர் கணேஷ்குமார் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார்.டேபிள் டென்னிஸ் ஆண்கள் பிரிவில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி; பெண்கள் பிரிவில் தேனி கால்நடை மருத்துவக் கல்லூரி முதலாமிடம் பிடித்தனர். கேரம் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரியினர் முதலாமிடம் பிடித்தனர்.சதுரங்கம் ஆண்கள் பிரிவில், கொடுவள்ளி உணவு மற்றும் பால் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் பெண்கள் பிரிவில், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரியினர் முதலாமிடம் பிடித்தனர்.விழாவில், துணை விளையாட்டு செயலர்கள் பிரித்தி மற்றும் இன்பராஜ் வரவேற்றனர். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை., விளையாட்டு செயலர் ரமேஷ், உடுமலை கால்நடை மருத்துவக் கல்லூரி விளையாட்டு செயலர் ரவி உள்ளிட்டோர் பேசினர்.