வரும் 23ல் கிராம சபா கூட்டம் பருவமழை பாதிப்பு தவிர்க்க அறிவுரை
திருப்பூர் 'வரும், 23ம் தேதி நடக்க இருக்கிற கிராம சபை கூட்டத்தில், வட கிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆண்டுதோறும், ஜன., 26; மார்ச், 22; மே 1; ஆக., 15; அக்., 2 மற்றும் நவ,. 1 ஆகிய நாட்களில் கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட வேண்டும். உள்ளாட்சி தினமான, நவ., 1ம் தேதி தீபாவளி தொடர் விடுமுறை நாளாக இருந்ததால், அதற்கு பதிலாக, வரும், 23ம் தேதி கிராம சபை கூட இருக்கிறது. இதில், வட கிழக்குப்பருவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான விவாதம் நடத்தி, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, ஊரக வளர்ச்சி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, தாழ்வான மற்றும் மழைநீர் தேங்கக்கூடிய வாய்ப்புள்ள பகுதிகளை அடையாளம் கண்டு, அந்த இடங்களில் மழைநீர் தடைபடாமல் செல்லும் வகையில் வழி ஏற்படுத்த வேண்டும்.புயல் பாதுகாப்பு மையங்களை முறையாக சுத்தம் செய்து, தயார் நிலையில் வைக்க வேண்டும். புயல் பாதுகாப்பு மையங்களில் குடிநீர், மின் விளக்கு வசதி, கழிப்பிட வசதி போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.பருவமழை தொடங்குவதற்கு முன்பே, வாய்க்கால் அடைப்புகளை நீக்கி, மழைநீர் வழிந்தோட வழிவகை ஏற்படுத்த வேண்டும். தேவையான மணல் மூட்டைகள் மற்றும் சவுக்கு கட்டைகள் போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் அவ்வப்போது வழங்கும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.