உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்துக்கு நீர் திறப்பு; 94,068 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்

திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்துக்கு நீர் திறப்பு; 94,068 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்

உடுமலை; பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது; கோவை, திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட, 94,068 ஏக்கர் நிலங்கள் இந்த மண்டலத்தில் பாசன வசதி பெறும். திருப்பூர் மாவட்டம், உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து, பி.ஏ.பி., நான்கு மண்டல பாசனத்துக்கும் சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்படுகிறது.நேற்று காலை 10:45 மணிக்கு, அணையிலிருந்து, நான்காம் மண்டலத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 94,068 ஏக்கர் நிலங்களின் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த மண்டலத்தில், வரும், டிச., 9ம் தேதி வரை, 135 நாட்களுக்கு உரிய இடைவெளி விட்டு, 5 சுற்றுகளாக, மொத்தம், 10,250 மில்லியன் கன அடி தண்ணீர் பாசனத்துக்கு வழங்க, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அணையிலிருந்து பிரதான கால்வாயில், பாசன நீரை, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி திறந்து வைத்தனர். மேலும், பாலாறு பழைய ஆயக்கட்டு பாசனமான ஏழு குள பாசன குளங்களுக்கு, அணையிலிருந்து தளி கால்வாயிலும், தண்ணீர் திறக்கப்பட்டது. இப்பாசனத்துக்கு, வரும் 2026 மே மாதம், 31ம் தேதி வரை, மொத்தம், 700 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில், திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே, பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நேற்று காலை நிலவரப்படி திருமூர்த்தி அணையின் நீர் மட்டம், மொத்தமுள்ள 60 அடியில், 52.31 அடி நீர் மட்டமும், அணைக்கு வினாடிக்கு 981 கன அடி நீர் வரத்தும் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ