தண்ணீரை பரிசோதிப்பது அவசியம்; விவசாயிகளுக்கு வழிகாட்டுதல்
உடுமலை; விளைநிலங்களில் பயன்படுத்தப்படும் பாசன நீரை பரிசோதிப்பதால், அதற்கேற்ப நீர் மற்றும் உரமேலாண்மையை பின்பற்ற முடியும். எனவே, இதற்காக நீர் மாதிரி எடுக்கும் முறை குறித்து கோவை வேளாண் பல்கலை., விவசாயிகளுக்கு வழிகாட்டியுள்ளது.அதன்படி, கிணறு மற்றும் போர்வெல் இருந்து பெறப்படும் பாசன நீரை பரிசோதிக்க வேண்டும். நீராதாரங்களின் தண்ணீர் குழாயிலிருந்து நீர் மாதிரி எடுக்கும் போது, முப்பது நிமிடத்துக்கு தண்ணீர் இறைத்த பின் நீர் மாதிரி எடுக்க வேண்டும்.அரை லிட்டர் அளவுக்கு நீர் மாதிரி எடுத்து, உடனடியாக பரிசோதனை நிலையத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.கிணற்றிலிருந்து நீர் மாதிரி எடுக்கும் போது, சுத்தமான பாட்டிலை கயிற்றால் கட்டி கிணற்றில் இறக்க வேண்டும்.பாட்டில் நீரில் மூழ்கிய பிறகு கிணற்றிலிருந்து வெளியே எடுத்து பரிசோதனைக்கு கொடுக்கவும். விளைநிலங்களில் பயன்படுத்தப்படும் பாசன நீரை பரிசோதிப்பதால் அதிலுள்ள சத்துகள் இதர விபரங்கள் முழுமையாக தெரிய வரும்.இவ்வாறு, வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.