உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அமராவதி பிரதான கால்வாய் உடைப்பால் தண்ணீர் வீணானது! புதிய ஆயக்கட்டு விவசாயிகள் வேதனை

அமராவதி பிரதான கால்வாய் உடைப்பால் தண்ணீர் வீணானது! புதிய ஆயக்கட்டு விவசாயிகள் வேதனை

உடுமலை; அமராவதி பிரதான கால்வாயை புதுப்பிக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்யாததால், பல்வேறு நீர் நிர்வாக பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது; மழைக்காலத்தில், கிடைத்த தண்ணீரை பயன்படுத்த முடியாமல், நேற்று கால்வாய் கரை உடைந்தது; அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.இதில், புதிய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவிலுள்ள, 25,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலங்களுக்கு, அணையிலிருந்து, 64 கி.மீ., நீளம் அமைந்துள்ள பிரதான கால்வாய் வாயிலாக நீர் வழங்கப்படுகிறது.பயன்பாட்டுக்கு வந்து, 60 ஆண்டுக்கு மேலாகியும், கால்வாய் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. இதனால், கால்வாய் கரை கான்கிரீட் சிலாப் பல இடங்களில் பெயர்ந்தும், மதகுகள் சிதிலமடைந்தும் உள்ளது.இந்த கால்வாயின் இருபுறங்களிலும், ஓடைகள் குறுக்கிடும் பகுதியில், 'அண்டர் பாசேஸ்' எனப்படும் குகை நீர் வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, கால்வாயில் செல்லும் தண்ணீர் வெளியேறுகிறது.இப்பிரச்னைக்கு தீர்வாகவும், நீர் நிர்வாக பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், அமராவதி பிரதான கால்வாயை முழுமையாக புதுப்பிக்க விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

திட்ட மதிப்பீடு தயாரிப்பு

பொதுப்பணித்துறை தரப்பில், மூன்று ஆண்டுக்கு முன், 25 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பினர்; அரசு நிதி ஒதுக்கவில்லை. இதனால், பாசன காலத்தில், கரை உடைந்து தண்ணீர் நிறுத்தப்படுகிறது.இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன்னதாகவே துவங்கி, அமராவதி அணை நிரம்பியதால், பழைய, புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு முன்னதாகவே தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.அதற்கேற்ப, நேற்று முன்தினம் அமராவதி அணை முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி, அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்ற தீர்மானிக்கப்பட்டு, அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அதே வேளையில், அணையிலிருந்து பிரதான கால்வாயிலும் தண்ணீர் திறக்கப்பட்டது.புதிய ஆயக்கட்டு பகுதியான தாராபுரம், மடத்துக்குளம் பகுதியில், போதிய மழை இல்லாத நிலையில், பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்தது.ஆக., மாதத்தில், பாசன காலம் துவங்கும் முன் மழையால், முன்னதாகவே கிடைத்த தண்ணீரை கொண்டு, சாகுபடிக்கான பணிகளை துவக்க விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், பிரதான கால்வாயில், செல்வபுரம் அருகே உடைப்பு ஏற்பட்டது.இதையடுத்து, அணையிலிருந்து பிரதான கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு, உடைப்பு ஏற்பட்ட இடத்தில் மூட்டைகளை அடுக்கி, பராமரிப்பு பணி பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்படுகிறது.

அதிகாரிகள் அலட்சியம்

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கூறியதாவது: அமராவதி பிரதான கால்வாய் உடைப்புக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியமே முக்கிய காரணமாகும். அணையின் அருகிலேயே, பிரதான கால்வாயின் கரை மோசமான நிலையில் இருந்தது குறித்து, கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.இதனால், அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதும், கரை உடைந்துள்ளது. மழைக்காலத்திலும், புதிய ஆயக்கட்டு விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.பிரதான கால்வாய் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பில் அலட்சியம் காட்டும் துறையினர் மீது, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி