நகைக்கடன் தொடர்பான திருத்தம் வேண்டும்! செல்லமுத்து வலியுறுத்தல்
பல்லடம் : நகைக்கடன் பெறுவதில் கொண்டுவரப்பட்ட புதிய சட்ட திருத்தத்தை, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலையிட்டு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என, உ.உ.க., மாநிலத் தலைவர் செல்லமுத்து வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து, பல்லடத்தில் நேற்று அவர் கூறியதாவது:நகை அடமானம் வைத்து கடன் பெறுவதற்கு உண்டான ரிசர்வ் வங்கியின் புதிய திருத்தம், ஏழை எளிய மக்களையும், விவசாயிகளையும் பெரிதும் பாதிக்கக்கூடியது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த புதிய திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மேலும், நகை கடன் பெறுவதில், 80 சதவீதம் விவசாயிகள் பங்கும், 20 சதவீதம் ஏழை எளிய மக்களின் பங்கும் உள்ளது. பொதுமக்கள், தங்களது சொந்த தேவைகளுக்காக கடன் பெறுகின்றனர்.ஆனால், விவசாயிகள், முழுக்க முழுக்க தனது விவசாய தொழிலை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் நகைக்கடன் பெறுகின்றனர். இச்சூழலில், எந்த ஒரு ஆலோசனையும் இல்லாமல், திடீரென கொண்டுவரப்பட்ட நகைக்கடன் சட்ட திருத்தத்தால், ஏழை எளிய மக்கள், விவசாயிகள் சிரமப்படுவார்கள். எனவே, நிதித்துறை அமைச்சர் இதில் தலையிட்டு, வாபஸ் பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.