உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஊரையும், விவசாயத்தையும் காக்க எந்த நிலைக்கும் செல்வோம்

ஊரையும், விவசாயத்தையும் காக்க எந்த நிலைக்கும் செல்வோம்

பல்லடம் : கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கமாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது: திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், குப்பைகளை முறையாக கையாண்டு அகற்ற நடவடிக்கை எடுக்காமல் திணறி வருவது வேடிக்கையாக உள்ளது. நகரப் பகுதியில் மட்டுமன்றி, பேரூராட்சி, ஊராட்சி மற்றும் குக்கிராமங்கள் என, தினசரி, குப்பை வண்டிகளுடன் பாறைக்குழிகளை தேடிச் செல்வதை மாநகராட்சிக்கு வாடிக்கையாகிவிட்டது. ஏற்கனவே, காளம்பாளையம், கீரனுார், இச்சிப்பட்டி என பல்வேறு கிராமங்களிலும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது, விவசாய தொழில் நிறைந்த இடுவாய் கிராமத்தை நோக்கி மாநகராட்சியினர் திரும்பி உள்ளனர். நேற்று முன்தினம், இடுவாய் கிராமத்தில் குப்பை கொட்ட மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து சென்றுள்ள தகவல் கிடைத்துள்ளது. கிராமங்களில் குப்பை கொட்டி மாசு படுத்தினால், விவசாயம் அழிவுப் பாதைக்கு செல்வதுடன், கிராம மக்களும் நோய்வாய்ப்படும் அபாயம் உள்ளது. இத்தனை கிராமங்களில் இருந்தும் எதிர்ப்பு கிளம்புவதை அடிப்படையாகக் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் சிந்தித்து செயல்பட வேண்டாமா? பல கிராமங்களில் எதிர்ப்பு கிளம்பியும், காவல்துறையை பயன்படுத்தி அடக்கு முறையை கையாள்வது ஏன்? குப்பை கொட்டுவதற்கு காவல்துறை எதற்காக வர வேண்டும். எனவே, ஊரையும், விவசாயத்தையும் காப்பாற்ற எந்த நிலைக்கும் செல்வோம். காவல்துறையை வைத்து, கட்டாயப்படுத்தி கிராமங்களில் குப்பை கொட்டுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இடுவாய் கிராமத்தில் இன்று (24ம் தேதி) அனைத்துக் கட்சியினர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ