மதுக்கடையை திறக்க விட மாட்டோம்
திருப்பூர்: திருப்பூர் எஸ்.ஆர். நகர் அருகே, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த மதுக்கடை நேற்று விற்பனைக்கு திறக்கப்படவில்லை. கடை திறந்தால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்த குடியிருப்போர் சங்கம் முடிவு செய்துள்ளது.திருப்பூர் மாநகராட்சி, எஸ்.ஆர்., நகரை ஒட்டி, நொய்யல் கரையோரம், 'டாஸ்மாக்' மதுக்கடை (எண்: 1925) நேற்று முன் தினம் திறக்கப்பட்டது.மதுக்கடை திறந்ததற்கு, எஸ்.ஆர். நகர் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ.,- கம்யூ., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.நேற்று காலை எஸ்.ஆர்., நகர் (வடக்கு) குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்க தலைவர் கணேசன், செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி மதுக்கடை திறக்கப்பட்டால் அனைவரும் திரண்டு எதிர்ப்பு தெரிவித்து, பிரதான ரோட்டில் மறியல் நடத்துவது, மதுக்கடை எதிர்ப்பு போராட்டத்துக்கு அனைத்து கட்சி நிர்வாகிகளிடம் ஆதரவு கேட்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.நேற்று முன்தினம் பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக மதுக்கடை மூடப்பட்டது. நேற்று காலை வழக்கம் போல் கடையைத் திறக்க ஊழியர்கள் வந்தனர். சுற்றுப்பகுதியில் போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்த வந்தால், அவர்களை அப்புறப்படுத்த முன்னெச்சரிக்கையாக வாகனங்கள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டன.மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்த நிலையிலும், தெற்கு மற்றும் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் மாவட்ட நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்ததாலும், டாஸ்மாக் அதிகாரிகள் நேற்று இக்கடையைத் திறக்க எந்த அறிவுறுத்தலும் ஊழியர்களுக்கு வழங்கவில்லை.