வெட்டப்படும் மரங்கள் அனுமதி தந்தது யார்?
பல்லடம்: அனுப்பட்டி, புளியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக வரும் நீரோடை, பல்லடம் நகர பகுதி வழியாகச் சென்று, நொய்யலில் கலக்கிறது. ஓடை வழித்தடத்தில், விதிமீறல் கட்டடங்கள், முட்புதர்கள் என, ஆக்கிரமிப்புகள் நீண்ட காலமாக அகற்றப்படாமல் உள்ளன.பல்லடம் நகரில் செல்லும் ஓடையின் ஒரு பகுதியை ஒட்டி சீமை கருவேல் உட்பட ஏராளமான மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன. ஓடையை ஒட்டி தனியாருக்கு சொந்தமான நிலங்களும் உள்ளன. ஓடைக்கு அருகிலுள்ள மரங்கள் கடந்த இரண்டு நாட்களாக வெட்டப்பட்டு வருகின்றன.சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'தனியார் நிலமாக இருந்தாலும், ஓடையாக இருந்தாலும் அனுமதி இன்றி மரங்கள் வெட்டுவது தவறு. இரண்டு நாட்களாக, ஓடையை ஒட்டி உள்ள பகுதியில் எண்ணற்ற மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. சீமைக் கருவேல் மரங்கள் மட்டுமே வெட்டப்படுவதாக இருந்தாலும், வருவாய்த்துறை மூலம் இதற்கு முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதுடன் வெட்டப்பட்ட மரங்கள் எங்கு செல்கின்றன என்ற கேள்வியும் எழுகிறது. வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர்.