உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கட்டுமானப்பணி துவங்காதது ஏன்?

கட்டுமானப்பணி துவங்காதது ஏன்?

திருப்பூர்- அனைத்து வார்டுகளிலும் தலா ஒரு நகர் நல மையம் அமைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி பல்வேறு வார்டுகளில் ஆரம்ப சுகாதார மையம் அல்லது நகர் நல மையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.அவ்வகையில் 17வது வார்டுக்கு உட்பட்ட அம்பேத்கர் நகரில், மாநகராட்சிக்குச் சொந்தமான இடம் கண்டறியப்பட்டு அங்கு நகர் நல மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான அலுவல் ரீதியான பணிகள் முடிந்து, கட்டுமானப் பணி துவங்க ஏதுவாக இடம் சுத்தம் செய்யும் பணி நடந்தது.நேற்று இதற்கான பூமி பூஜை நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பூமி பூஜை மற்றும் பணி துவங்குவதற்காக ஆயத்தம் எதுவும் மேற்கொள்ளவில்லை.கட்டுமானப் பணியை துவங்க வலியுறுத்தி அப்பகுதியினர் நேற்று அப்பகுதியில் திரண்டனர்.வார்டு கவுன்சிலர் செழியன் கூறியதாவது:நகர் நல மையம் கட்டும் இடம் மாநகராட்சிக்குச் சொந்தமானது. நீண்ட காலமாக இது பயன்படுத்தப்படாமல் இருந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தங்கள் வசதிக்காகப் பயன்படுத்தி ஆக்கிரமித்திருந்தனர்.தற்போது அங்கு கட்டடம் கட்டினால் இடம் பறி போய்விடும் என்ற அச்சத்தில், பொதுமக்கள் எதிர்ப்பு என உண்மைக்குப் புறம்பான வகையில், அரசியல் கட்சியினர் ஆதரவுடன் எதிர்ப்பு தெரிவிப்பதாகத் தெரிகிறது. மாநகராட்சி நிர்வாகம் இதை ஏற்கக் கூடாது. மக்கள் நலம் காக்கும் வகையில், மையம் கட்டப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.மாநகராட்சி தரப்பில் கேட்ட போது, 'நகர் நல மையம் கட்டும் பணி விரைவில் துவங்கும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ