உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிறிஸ்துமஸ் ஆர்டர் திருப்பூருக்கு கைகொடுக்குமா?

கிறிஸ்துமஸ் ஆர்டர் திருப்பூருக்கு கைகொடுக்குமா?

திருப்பூர்: ஆயத்த ஆடை மற்றும் பின்னலாடை உற்பத்தி முடிந்து, தீபாவளி விற்பனைக்காக டில்லி வரை அனுப்பி வைக்கப்பட்டதாக, உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். திருப்பூரில் உற்பத்தியாகும், பனியன் பின்ன லாடைகளுக்கு, நாடு முழுவதும் உள்ள மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல், 'பிராண்டட்' உள்ளாடைகளை பின்னுக்கு தள்ளும் வகையில், திருப்பூரில் தயாராகும், தரமான உள்ளாடைகளை, அனைத்து தரப்பினரும் விரும்பி அணிகின்றனர். பனியன் டிராயர் மற்றும் 'ட்ரங்ஸ்' ரகங்களை, வடமாநில ஆண்கள் விரும்பி அணிகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், திபாவளி ஆர்டர்கள் தான் திருப்பூர் உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர்களுக்கு கைகொடுக்கிறது. கடந்தஆண்டுகளை காட்டிலும், இந்தாண்டு விற்பனை திருப்திகரமாக மாறியுள்ளது. டில்லி, கொல்கத்தா, குஜராத், மகாராஷ்டிரா ஆந் திரா, ஒடிசா, கர்நாடகா, தெலுங்கானா மாநில சந்தைகளில், திருப்பூர் பனியன் ஆடைகள் விற்பனை நன்றாக நடந்துள்ளது. வங்கதேச ஆடை இறக்குமதி, உள்நாட்டு வர்த்தகத்துக்கு பெரும் சவாலாக மாறியிருந்தது. மத்திய அரசு சரியான நேரத்தில் கட்டுப்பாடு விதித்துள்ளதால், தரைவழி போக்குவரத்து வாயிலாக இறக்குமதி தடைபட்டுள்ளது. மலிவு விலை ஆடை வரத்து குறைந்ததால், உள்நாட்டில் உற்பத்தியாகும் தரமான ஆடைகள் விற்பனை மீண்டும் உயிர்பிடித்துள்ளது. தீபாவளி ஆர்டர்கள், இரண்டு கட்டமாக பெறப்பட்டு, உரியகாலத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. கன்டெய்னர் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கான பெரும்பாலான ஆர்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டது. பீஹாரில், சாத் பண்டிகை விற்பனைக்கான ஆடைகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூர் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்கள் கூறியதாவது: தீபாவளி பண்டிகைக்கு, தமிழகம் முழுவதும் இருந்து ஆர்டர்கள் கிடைத்தது; வடமாநில ஆர்டர்கள் வழக்கமான அளவு வந்தது. வங்கதேச ஆடை இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதித்துள்ளதால், நாடு முழுவதும் இருந்து வரவேற்பு அதிகரித்திருந்தது. இரவு நேர ஆடை, விளையாட்டு சீருடைகள், 'டி-சர்ட்'கள், குளிர்கால 'ஸ்வெட்டர்' போன்ற ஆடைகள், சிறுவர், இளைஞர்களுக்கான 'ட்ரக் சூட்' போன்ற பேண்ட்கள், அனைத்து வகை உள்ளாடைகளும் தயாரித்து அனுப்பினோம். வங்கதேச ஆடைகள் வரத்து தடைபட்டுள்ளதால், தீபாவளியை தொடர்ந்து, கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டுக்கான ஆர்டர்களும் வரும் என்று காத்திருக்கிறோம். தீபாவளி பண்டிகை விற்பனையில், சரக்கு விற்று தீர்ந்திருக்கும்; எனவே, வாராந்திர விற்பனைக்காக, மொத்த வியாபாரிகள் திருப்பூர் வந்து ஆர்டர் கொடுப்பார்கள். அதற்கு ஏற்ப, உற்பத்தியை துவக்குவோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ