கல்விக்கொடி பறக்குமா?
அவிநாசி அரசு கலைக்கல்லுாரி கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் துறையில் கோமளலட்சுமி, கவுரவ விரிவுரையாளராக பணிபுரிகிறார். மாணவ, மாணவியர் படிக்கும் பாடங்கள் எளிதாக அவர்கள் மனதில் புரிய வைக்கும் நோக்கிலும், திறன் வளர்க்கும் விதமாகவும் கல்விக் கொடி தயாரித்திருக்கிறார். பிரபஞ்சத்தை மையமாக வைத்து, தொழில், குடும்பம் ஆகியவற்றை விளக்காக பாவித்து, அது என்றும் பிரகாசமாக இருப்பதற்கு ஒரு மனிதன் எவ்வாறு தன் செயல்பாடுகளை வகுத்துக் கொள்ள வேண்டும் என்பதை உணரும் விதமாக கல்விக்கொடிஉணர்த்துகிறது. தொழில்நுட்பசாதனம், ஆசிரியர்கள், பெற்றோர் உதவியுடன், ஒவ்வொரு மாணவனின் பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக கல்விக்கொடியை வடிவமைத்திருக்கிறார். கோமளலட்சுமி கூறியதாவது:
படிக்கும் பாடங்களை தெரிந்து கொள்ள வேண்டும். பின், அதை கற்றுக் கொள்ள வேண்டும்; கற்றுக் கொண்டதை சிந்தனையில் ஏற்றி, அதை அவரவர் புரிதலுக்கு ஏற்ப விரிவாக்கம் செய்து கொள்ள வேண்டும். அதை செயல்படுத்தும் ஆற்றல் நம்மிடம் உள்ளதா, நம்மால் முடியுமா என்பதை உணர வேண்டும்; பின், நம்மாலும் அதை செய்து முடிக்க முடியும் என்ற நிலையை எட்டி, தங்களது பங்களிப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் கல்விக்கொடியை உருவாக்கியுள்ளேன். புரிந்து படிப்பது மட்டுமின்றி, அவரவர் சிந்தனைக்கேற்ப அதை புரிந்துக் கொண்டால், கற்கும் கல்வி பயனுள்ளதாக இருக்கும். தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப உபகரணங்களுடன் நம் வாழ்க்கை பிணைந்திருக்கிறது. இயந்திர ஆற்றலைவிட மனித ஆற்றல் மேலோங்கி இருக்க வேண் டும் என்ற அடிப்படையில் இந்த கல்வி போதிப்பு முறை இருக்கும்.