போலீசார் மீது கார் ஏற்ற முயற்சி கஞ்சா கடத்தல்காரர்களால் பகீர்
ஆரணி:வாகன சோதனையின் போது, கஞ்சா கடத்திய நபர்கள், போலீசார் மீது வாகனத்தை மோதி கொல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த களம்பூர் நரியம்பேட்டையில், நேற்று முன்தினம் இரவு களம்பூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, களம்பூர் நோக்கி சென்ற ஒரு காரை சோதனை செய்ய முயன்றனர். கார் நிற்காமல் போலீசார் மீது மோதுவது போல் வந்தது. இதில், அங்கிருந்து விலகி ஓடி போலீசார் தப்பினர். அதன் பின், போலீசார், காரை, ஒரு கி.மீ., துாரத்துக்கு பைக்கில் விரட்டி சென்று மடக்கி, காரில் இருந்த இருவரை பிடித்தனர். அவர்கள், களம்பூர் கைக்கிலாந்தாங்கல் கிராமம் ராஜ்குமார், 26, சுனில்குமார், 26, என தெரிந்தது. விசாரணையில், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி, வேலுாரில் சிலருக்கு விற்று விட்டு, ஆரணியில் விற்பனை செய்ய, 200 கிராம் கஞ்சா கொண்டு சென்றதாக தெரிவித்தனர். போலீசார், கார், கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.