ரயில்வே கேட்டை மூடாத கேட் கீப்பர் சஸ்பெண்ட்
திருவண்ணாமலை, திருவண்ணாமலை அருகே, ரயில்வே கேட்டை மூடாத, கேட் கீப்பர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். திருவண்ணாமலை - விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே, திருவண்ணாமலையிலிருந்து, 15 கி.மீ., தொலைவில் தண்டரை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இங்கு கேட் கீப்பராக ராமு என்பவர் பணிபுரிந்து வருகிறார். கடந்த, 13ம் தேதி நாகர்கோவிலிலிருந்து காச்சிகுடாவிற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரம் வழியாக திருவண்ணாமலை ரயில்வே ஸ்டேஷனை நோக்கி சென்றது. அப்போது, தண்டரை ரயில்வே ஸ்டேஷன் அருகே ரயில் சென்றது. சிக்னல் கிடைக்காததால், நாகர்கோவில் - காச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயிலின் லோகோ பைலட் இறங்கி சென்று பார்த்தபோது, ரயில்வே கேட் மூடாமல் இருந்தது தெரிந்தது. இதையடுத்து ரயில்வே கேட்டை, லோகோ பைலட் மூடி விட்டு சென்றார். பின்னர், இது குறித்து திருச்சி ரயில்வே கோட்ட உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். ரயில்வே உயரதிகாரிகள் விசாரித்து, கேட் கீப்பர் ராமுவை நேற்று, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டனர்.