| ADDED : ஜூலை 12, 2011 12:21 AM
திருச்சி: ''திருச்சி மாவட்டத்தில் குழந்தைகள் இறப்பு சதவீதம் 22.9
சதவீதமாக குறைந்துள்ளது,'' என டாக்டர் அலீம் பேசினார். திருச்சி மாவட்ட
குடும்ப நலச்செயலகம் சார்பில், உலக மக்கள் தொகை நாள் விழிப்புணர்வு கூட்டம்
கி.ஆ.பெ., விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் நேற்று நடந்தது.
பேச்சு, கட்டுரைப்போட்டிகளும் நடந்தது. நலப்பணிகள் இணை இயக்குனர்
மோகனசுந்தரம் தலைமை வகித்து, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
வழங்கி பேசுகையில், ''மக்கள் தொகை கட்டுப்படுத்துவதில் அனைவரும்
முனைப்புடன் செயல்பட வேண்டும். இல்லையெனில் பெரும் சிக்கலை சந்திக்க
நேரிடும்,'' என்றார். அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சந்திரசேகர்
பேசுகையில், ''மக்கள் தொகை கட்டுப்படுத்துவதில் தனிமனித பங்களிப்பு மிகவும்
முக்கியம். தனிமனிதன் தான் குழந்தை பிறப்பை கட்டுப்படுத்த முடியும்,''
என்றார். கி.ஆ.பெ., மருத்துவக்கல்லூரி, துணை முதல்வர் டாக்டர் அலீம்
பேசுகையில், ''மக்கள் தொகை கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு பற்றி
பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் மக்கள்
தொகையை கட்டுப்படுத்த முடியும். திருச்சி மாவட்டத்தில் குழந்தை இறப்பு
சதவீதம் 22.9 சதவீதமாக குறைந்துள்ளது,'' என்றார். நிகழ்ச்சியில், ஊரக
நலப்பணிகள், மருத்துவம், துணை இயக்குனர் எலிசபத்மேரி, மகப்பேறு டாக்டர்
பிரேமாவதி பிரபு இளங்கோ, மகளிர் திட்ட அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட
விரிவாக்க கல்வியாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.