| ADDED : செப் 14, 2024 10:53 PM
திருச்சி:திருச்சி, ஸ்ரீரங்கம் அருகே கீதாபுரத்தை சேர்ந்த மணிகண்டன், கணேசன் ஆகியோர் ஆடுகள் வளர்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் திரும்பிய போது, மூன்று ஆடுகள் மாயமாகி இருந்தன. காணாமல் போன ஆடுகளை பல இடங்களிலும் தேடினர்.இந்நிலையில், தி.மு.க., கொடி கட்டிய 'பார்ச்சுனர்' சொகுசு காரில் வந்தவர்கள், ஆடுகளை திருடிச் சென்றதாக சிலர் கூறினர். இது குறித்து, ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார், அப்பகுதி சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், நேற்று முன்தினம் மதியம் 1:30 மணியளவில், ஆடுகள் மேய்ச்சலுக்கு சென்று கொண்டிருந்த போது, ஆடுகளை முந்திச் சென்ற கட்சிக்கொடி கட்டிய கார் திடீரென நிறுத்தப்பட்டதும், காரில் இருந்து இறங்கிய ஒருவர், இரண்டு ஆடுகளை காரில் ஏற்றியதும் தெரியவந்தது.அப்போது ஆடுகள் சத்தமிட்டவாறு சிதறி ஓடியதும், அங்கிருந்து சென்ற கார் மீண்டும் திரும்பி வந்து, மீண்டும் ஒரு ஆட்டை காரில் துாக்கி போட்டுக் கொண்டு சென்றதும் பதிவாகி இருந்தன. கேமரா காட்சி மற்றும் கார் எண்ணை வைத்து, ஆடு திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.