7 ஆண்டுக்கு முன் தலைமறைவு சிங்கப்பூரில் இருந்து வந்தவர் கைது
திருச்சி:தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள பாப்பாநாட்டைச் சேர்ந்தவர் தர்மராசு, 42. இவர், 2018ல் ஒரத்தநாடில் கொலை முயற்சி வழக்கில் சிக்கி, போலீசாருக்கு பயந்து, சிங்கப்பூர் சென்றார். அவர் தலைமறைவானது குறித்து, அனைத்து விமான நிலையங்களுக்கும், 'லுக் அவுட்' நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானத்தில் நேற்று காலை வந்த பயணியரை, திருச்சி விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்ட போது, தர்மராசு சிக்கினார். விமான நிலைய அதிகாரிகள் தகவலில், ஒரத்தநாடு போலீசார் நேற்று மாலை திருச்சி வந்து அவரை அழைத்துச் சென்றனர்.மேலும், மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு, 'ஏர் ஏசியா' விமானம் திருச்சி வந்தது. பயணியரை, குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனர்.அதில், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சேர்ந்த கண்ணன், 53, கணேசன், 51, ஆகியோர், போலி பாஸ்போர்ட்டில் வந்தது தெரிந்து, இருவரையும் விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.