தொழிலதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய ரவுடிகள் 2 பேர் கைது
வேலுார்:வேலுாரில், தொழிலதிபரிடம், 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய ரவுடிகள், 2 பேரை போலீசார் கைது செய்தனர். வேலுார் கொணவட்டத்தை சேர்ந்தவர் யாசின், 35, இவர், லாட்ஜ் மற்றும் கோழி இறைச்சி மொத்த வியாபாரம் செய்கிறார். இவரிடம் சில நாட்களுக்கு முன், ரவுடி உதயா, 38, என்பவர், '5 லட்சம் ரூபாய் தர வேண்டும். இல்லையேல், வீட்டில் அனைவரையும் கொலை செய்து விடுவேன்' என மிரட்டினார். அதிர்ச்சியடைந்த யாசின், வேலுார் வடக்கு போலீசில் புகார் செய்தார்.போலீசாரின் அறிவுறுத்தலின் படி, வேலுார் ஓல்டு டவுன் பகுதிக்கு உதயாவை வரவழைத்து, முதற்கட்டமாக, 30,000 ரூபாயை, யாசின் கொடுக்க ஏற்பாடு செய்தனர். அப்போது அங்கு வந்த உதயா, யாசினிடம், பணத்தை பெற்றபோது, அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த ரவுடி பாஷா, 38, என்பவரையும் பிடித்தனர்.இருவரையும் கைது செய்து, தலைமறைவான மேலும் இருவரை, போலீசார் தேடி வருகின்றனர்.கைதான உதயா மீது, வேலுார் தெற்கு போலீசில், கொலை மிரட்டல், வழிப்பறி, ஆள் கடத்தல் உள்ளிட்ட, 22 வழக்குகள் உள்ளன.