உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / ஹெல்மெட் அணியாத அரசு அலுவலர்களுக்கு அபராதம் தர்மபுரி கலெக்டர் உத்தரவால் நடவடிக்கை

ஹெல்மெட் அணியாத அரசு அலுவலர்களுக்கு அபராதம் தர்மபுரி கலெக்டர் உத்தரவால் நடவடிக்கை

தர்மபுரி :தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு, ஹெல்மெட் அணியாமல் வந்த, அரசு அலுவலர்களுக்கு போக்குவரத்து போலீசார், 1,000 ரூபாய் அபராதம் விதித்தனர். கலெக்டர் அலுவலகத்தில், பணிபுரியும் அனைத்து அலுவலர்களும், கட்டாயம் ஹெல்மெட் அணிந்து பணிக்கு வர வேண்டுமென, கடந்த மாதம் தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் உத்தரவிட்டார். அரசு அலுவலர்கள் முன் மாதிரியாக செயல்பட்டால்தான், பொதுமக்கள் தாமாக முன்வந்து, ஹெல்மெட் அணிவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல் அமையும் என தெரிவித்திருந்தார்.இதை சிலர் மட்டுமே கடைப்பிடித்த நிலையில், மற்றவர்கள் கலெக்டர் உத்தரவை கண்டு கொள்ளவில்லை. இதனால், பைக்கில் ஹெல்மெட் அணியாமல் பணிக்கு வரும், அலுவலர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.தர்மபுரி டவுன் போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ.,க்கள் சரவணன், சதீஷ் ஆகியோர், நேற்று கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன், சோதனையில் ஈடுபட்டனர்.இதில், ஹெல்மெட் அணியாமல் வந்த அரசு அலுவலர்களுக்கு, 1,000 ரூபாய் அபராதம் விதித்தனர். அரசு ஊழியர்களாகிய எங்களுக்கே அபராதமா என, போலீசாரிடம் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு சிலர் அபராதத்தை தவிர்க்க, மாற்று வழியில் அலுவலகம் சென்றனர். நேற்று நடந்த ஹெல்மெட் சோதனையின் போது, 22 அரசு அலுவலர்களுக்கு தலா, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை