உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / வேகமாக செயல்படும் நீதி லஞ்ச வழக்கில் 13 ஆண்டுக்கு பின் தீர்ப்பு

வேகமாக செயல்படும் நீதி லஞ்ச வழக்கில் 13 ஆண்டுக்கு பின் தீர்ப்பு

வேலுார்,:வேலுார் எஸ்.பி., அலுவலக இளநிலை உதவியாளர் லஞ்சம் பெற்ற வழக்கில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு, 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.வேலுார் எஸ்.பி., அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்தவர் பாஸ்கர், 62. வேலுார் அடுத்த கீழ் அரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் சின்னதுரை, 54. இருவரும், வேலுாரில் தினமும் காலை நடைபயிற்சி செய்வது வழக்கம்.கடந்த, 2012ல் பாஸ்கர், சின்னதுரையிடம், 'உங்கள் மீது எஸ்.பி., அலுவலகத்திற்கு ஊர் பொதுமக்கள் சார்பில் ஒரு புகார் வந்துள்ளது. நடவடிக்கை எடுக்காமல் இருக்க, 20,000 ரூபாய் தர வேண்டும்' என, லஞ்சம் கேட்டு மிரட்டினார்.இதற்கு, தன் மகள் திருமண செலவு உள்ளதால், பண நெருக்கடியாக உள்ளதாக சின்னதுரை கூறினார். இதற்கு பாஸ்கர், முதற்கட்டமாக, 15,000 ரூபாயும், பின்னர், 5,000 ரூபாயும் தருமாறு கூறினார். சின்னதுரை, வேலுார் லஞ்ச ஒழிப்பு போலீசில் 2012 ஆக., 2ல் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையின்படி, 2012 ஆக., 3ல், 15,000 ரூபாயை சின்னதுரை, பாஸ்கரிடம் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், பாஸ்கரை கைது செய்தனர்.வேலுார் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 13 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடந்தது. விசாரித்த நீதிபதி பிரபாகரன், நேற்று முன்தினம் மாலை பாஸ்கருக்கு, 3 ஆண்டு சிறை, 15,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ