வெளிநாடு வேலைக்கு செல்வோருக்கு அரசு மூலம் அடையாள அட்டை
விழுப்புரம்: வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், தமிழக அரசிடம் பதிவு செய்து அடையாள அட்டையை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் அயலக தமிழர்கள் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர் நல அறக்கட்டளையின் சார்பில் வழிகாட்டி மையங்கள் செயல்பட்டு வருகிறது.அதன்படி விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வெளிநாட்டிற்கு வேலைதேடி செல்லும் தமிழர்களுக்கான ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது.இந்த மையத்தில், வெளிநாடு சென்று வேலை செய்பவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் வெளிநாடு வேலை செல்ல முயற்சிப்பவர்களுக்கான ஆலோசனை முகாம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர்கள் ஜாக்குலின், ராஜேஸ்வரி ஆலோசனைகள் வழங்கினர்.அப்போது, தமிழகத்தில் இருந்து வெளிநாடு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், போலி நிறுவனங்கள், மோசடி ஏஜன்ட்டுகளிடம் ஏமாறும் நிலை நீடிக்கிறது. வெளிநாட்டு வேலைக்கு காத்திருக்கும் தொழிலாளர்களை குறிவைக்கும் போலி முகவர்கள், அதிகமான சம்பளம், நல்ல வேலை என ஆசை வார்த்தை கூறி அப்பாவி மக்களிடம் பணம் பறித்து, வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர்.அரசிடம் பதிவு பெறாத முகவர்கள், சுற்றுலா விசா மூலம் முறையான ஒப்பந்தங்கள் இன்றியும், வேலைக்கு அனுப்பி வைக்கின்றனர்.வெளிநாடு வேலைக்குச் செல்வதற்கு முன், தமிழக அரசின் அயலக தமிழர்கள் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையின் ஆலோசனை பெற வேண்டும். மேலும், தமிழக அரசின் அயலக தமிழர்கள் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையின் மூலம் பதிவு செய்து, அடையாள அட்டையை பெறலாம்.விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் வழிகாட்டி மையத்தில், பாஸ்போர்ட் போட்டோ, ஆதார் கார்டு, பாஸ்போர்ட் ஆகியவற்றுடன் வந்து பதிவு செய்யலாம் என ஆலோசனை வழங்கப்பட்டது.