திண்டிவனம்: திண்டிவனம் அங்காளம்மன் கோவில் மயானக் கொள்ளை ஊர்வலத்தில் பா.ம.க., - வி.சி., கட்சியினரிடை நடந்த கல்வீச்சு மோதலில் 5 பேர் மண்டை உடைந்தது. போலீசார் தடியடி நடத்தி யதால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், செஞ்சி ரோட்டில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று 12:15 மணிக்கு கோவிலில் இருந்து அங்காள பரமேஸ்வரி அம்மன் காளி அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் மயானத்திற்கு ஊர்வலமாக புறப்பட்டது.ஊர்வலத்தில் வேண்டுதல் கொண்ட பக்தர்கள் அம்மன் வேடமிட்டு மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள், சப் கலெக்டர் உத்தரவை மீறி தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., - வி.சி., கொடியுடன் ஆடி வந்தனர்.மாலை 5:00 மணிக்கு நேரு வீதி பழைய கோர்ட் எதிரே வி.சி., கொடியுடன் ஆடியவர்களுக்கும், தாலுகா அலுவலகம் அருகில் பா.ம.க., கொடியுடன் ஆடியவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கல்வீச்சில் ஈடுபட்டனர். அதில், பா.ம.க.,வைச் சேர்ந்த 5 பேர் மண்டை உடைந்தது. உடன் ஏ.டி.எஸ்.பி., திருமால் தலைமையிலான போலீசார் தடியடி நடத்தி இருதரப்பினரையும் கலைத்தனர். இச்சம்பத்தினால், அப்பகுதி போர்க்களம்போல் காணப்பட்டது. கல்வீச்சில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அதனைத் தொடர்ந்து மாலை 5:30 மணிக்கு முடிக்க வேண்டிய மயானக்கொள்ளை ஊர்வலம் மாலை 5:15 மணிக்கு முடித்து வைக்கப்பட்டது.கடந்தாண்டும் இதேபோன்று இவ்விரு கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டு, போலீஸ் தடியடி நடத்தியது குறிப்பிடத்தக்கது.
பா.ம.க.,வினர் முற்றுகை
தடியடியை கண்டித்து, பா.ம.க.,வினர் மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமையில் போலீஸ் வேனை முற்றுகையிட்டு, பிரச்னை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், ஒருதலைப்பட்சமாக பா.ம.க.,வினர் மீது தடியடி நடத்துவது ஏன் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.