திண்டிவனத்தில் விளையாடுவதற்கு போதுமான மைதானம் இல்லாமல் மாணவர்கள் அவதி
திண்டிவனம் : திண்டிவனம் பகுதியில் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்கள் விளையாடுவதற்கு போதுமான மைதானம் இல்லாமல் அவதியடைகின்றனர். திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிக அளவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளது. இதில் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் விளையாடுவதற்கு போதுமான அளவிற்கு விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. ஆனால் அரசு பள்ளிகளில் தனியாக விளையாட்டு மைதானங்கள் இல்லை. இதனால் விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதற்கு போதுமான விளையாட்டு மைதானம் இல்லாமல் இருப்பதால், அவர்கள் விளையாட்டில் மேற்கொண்டு சாதிக்க முடியாத நிலை உள்ளது. குறிப்பாக திண்டிவனத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நகரப்பகுதியில் காலியாக உள்ள இடங்களில் கால்பந்து விளையாடுவது, கிரிக்கெட் விளையாடுவது உள்ளிட்ட விளையாட்டில் ஈடுபடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது இதில் திண்டிவனம் அரசு மருத்துவமனை எதிரிலுள்ள காலியாக உள்ள விளையாட்டு மைதானம் யாருக்கு சொந்தம் என்று கோர்டில் வழக்கு உள்ளது. தற்போது மைதானத்திலுள்ள திண்டிவனம் யுனைடெட் அசோசியேஷன் கிளப்பிற்கும், நகராட்சிக்கும் காலி மைதானம் யாருக்கு சொந்தம் என்று வழக்கில் தீர்ப்பு வராத நிலையில், இடப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படாத நிலை உள்ளது. விசாலமான இந்த மைதானத்தில் தற்போது, பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள், பால் பேட்மிட்டன், வாலிபால், கால்பந்து போன்ற விளையாட்டுகளை தினந்தோறும் விளையாடி வருகின்றனர்.தற்போது அதே இடத்திலுள்ள கால்பந்து மைதானத்தை, திண்டிவனத்திலுள்ள நேஷனல் பள்ளி மாணவர்கள் விளையாட்டு மைதானம் இல்லாததால், பிரச்னைக்குறிய மைதானத்தில் கிளப் மூலம் ஒப்பந்தம் ஏற்படுத்தி, அந்த மைதானத்தை மாணவர்கள் விளையாடுவதற்காக பயன்படுத்தி வருகின்றனர். திண்டிவனம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறமையை ஊக்குவிக்கும் வகையில், நகராட்சிக்கு சொந்தம் என கூறப்படும் மைதான பிரச்னையில் மாவட்ட கலெக்டர் தலையிட்டு, தீர்த்து வைப்பதற்கு கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும் என்பதே நகர மக்களின் ஒட்டு மொத்த கோரிக்கையாக உள்ளது.