ரேஷன் பொருட்கள் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
மயிலம் : மயிலம் அடுத்த தழுதாளி கிராமத்தில் ரேஷன் பொருட்கள் முறையாக வழங்காததை கண்டித்து மக்கள் திடீர் முற்றுகை போராட்டம் செய்தனர்.மயிலம் அருகே உள்ள தழுதாளி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் 720 குடும்ப அட்டைகள் உள்ளது. இவர்களுக்கு கடந்த வாரம் அரிசி, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் 100 கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டது.மீதமுள்ள 620 ரேஷன் கார்டுக்கு அரிசி எந்த பொருட்களும் இதுவரை வழங்கப்படவில்லை. இதேபோன்று கடந்த சில மாதங்களாக கோதுமை மற்றும் மண்ணெண்ணெய் எந்த கார்டுகளுக்கும் வழங்கவில்லை.இது குறித்து விற்பனையாளரிடம் பொதுமக்கள் விவரம் கேட்டாலும் சரியான பதில் சொல்லுவதில்லை, இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், நேற்று மதியம் 2:30 மணியளவில் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த மயிலம் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் போராட்டம் செய்த கிராம மக்களிடம், அதிகாரிகளிடம் பேசி ரேஷன் பொருட்கள் முறையாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதனையேற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.