வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வாய்ப்பேயில்லை , எங்களுக்கு வெள்ளைக்காரன் வந்தபிறகுதான் தமிழர்கள் இருளில் இருந்து வெளியே வந்தனர் என்றால் தான் பிடிக்கும் இல்லை அரபியர்கள் தான் இந்த சிலைகளை செய்ய கருவிகளை கொடுத்தனர் என்றாவது எழுதுங்க
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், சோழர் காலத்தைச் சேர்ந்த 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிப்பட்டு அருகே ஆலகிராமத்தினர் அளித்த தகவலின் பேரில், விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் மற்றும் குழுவினர் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பவுத்த சிற்பம் உள்ளிட்ட சிற்பங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது: ஆலகிராமம் செக்கடி தெரு சந்திப்பில், பாதியளவு மண்ணில் புதைந்தும் புதர்கள் அடர்ந்துள்ள பகுதியில் வைஷ்ணவி தேவி சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. இந்த சிற்பம் நான்கு கரங்களுடன் அமர்ந்த நிலையில் உள்ளது. முன்னிரு கரங்களில் வலது கரம் அபய முத்திரையிலும், இடது கரம் தொடை மீது வைத்த நிலையிலும், பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரத்தை ஏந்தியும் காணப்படுகிறது. அழகிய தலை அலங்காரம், அணிகலன்களுடன் அழகுடன் வைஷ்ணவி தேவி சிற்பம் உள்ளது. இதேபோன்று, அங்குள்ள செல்லியம்மன் கோவில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட கவுமாரி சிற்பம் வலது காலை மடித்தும் இடது காலை தொங்கவிட்டும் அமர்ந்த நிலையில், நான்கு கரங்களுடன் உள்ளது. ஆடை அணிகலன்கள் மற்றும் சன்ன வீரம் எனப்படும் வீரச்சங்கிலி அணிந்து, புன்முறுவல் பூத்த நிலையில் மிகுந்த கலை நயத்துடன் இந்த சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இந்த வைஷ்ணவி, கவுமாரி சிற்பங்கள், சோழர் காலத்தைச் (கி.பி.10ம் நுாற்றாண்டு) சேர்ந்தவை. இதனை மூத்த தொல்லியலாளர் ஸ்ரீதரன் உறுதிப்படுத்தினார். ஒரு காலத்தில், இவைகள் சிவன் கோவில் வளாகத்தில் இருந்து, வெவ்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளன. மேலும், ஜெயினர் கோவில் தெரு ஓரத்தில், புதர்கள் மண்டிய இடத்தில் பவுத்த சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பம் அமர்ந்த நிலையில் இரண்டு கரங்களுடன் உள்ளார். பின்னணியில் ஐந்து தலை நாகம் உள்ளது. இவர், பவுத்த சமயத்தைச் சேர்ந்த அவலோகிதேஸ்வரர் ஆவார். இந்த சிற்பத்தின் காலமும் கி.பி.10ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். இதே போன்ற சிற்பம், பிரான்மலை அருகாமையில் உள்ள திருக்கோளக்குடி பகுதியில் காணப்படுவதாக மூத்த கல்வெட்டு ஆய்வாளர் விஜயவேணுகோபால் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டத்தில், பவுத்தம் பரவியிருந்ததற்கு இந்த சிற்பம் சான்றாக உள்ளது. இவ்வாறு செங்குட்டுவன் கூறினார்.
வாய்ப்பேயில்லை , எங்களுக்கு வெள்ளைக்காரன் வந்தபிறகுதான் தமிழர்கள் இருளில் இருந்து வெளியே வந்தனர் என்றால் தான் பிடிக்கும் இல்லை அரபியர்கள் தான் இந்த சிலைகளை செய்ய கருவிகளை கொடுத்தனர் என்றாவது எழுதுங்க