வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நல்லா ரிப்பேர் பண்ணி வெச்சா குடிகாரப் பயலுலும், கஞ்சா அடிப்பவனும் வந்து தூங்குவான். ஒண்ணும் பண்ண முடியாது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், பராமரிப்பின்றி நுாறாண்டுகள் பழமை வாய்ந்த கல் மண்டபங்கள் சிதைந்து வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க மண்டபங்களை தொல்லியல்துறை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், கலைநயத்துடன் ஏராளமான கோவில்கள், மண்டபங்களை ஏற்படுத்தினர். அதில், பெரும்பாலான கோவில்கள் பராமரிக்கப்பட்டு இன்றளவும் வரலாற்றினை நினைவு கூர்ந்து வருகிறது. ஆனால், பெரும்பாலான கல் மண்டபங்கள், சிற்பங்கள் பராமரிப்பின்றி சிதைந்து வருகிறது. குறிப்பாக, செஞ்சி அடுத்த பனமலை பகுதியில் பல்லவர்கள் கட்டிய தாளகிரீஸ்வரர் கோவிலுக்கு அருகே உள்ள கல் மண்டபங்கள் பாழடைந்துள்ளது. அப்பகுதி வரலாற்று ஆர்வலர் அய்யனார் உள்ளிட்டோர் கூறியதாவது: செஞ்சி கோட்டையை ஆண்ட பல்லவ மன்னர்கள் மற்றும் ராஜா தேசிங்கு உள்ளிட்டோர், செஞ்சியிலிருந்து தஞ்சாவூர் கோட்டைக்கு போருக்கு செல்லும்போது, பனமலை தாளகிரீஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, வழியில் இரவு கொசப்பாளையம் கிராம கல் மண்டபத்தில் தங்கிவிட்டு, தஞ்சாவூர் செல்வார்கள் என முன்னோர்கள் குறிப்பிடுகின்றனர். அவர்கள் செல்லும்போது, மன்னர்கள், மகாராணிகள் மற்றும் குதிரைகள் தங்கி செல்வதற்காக, இது போன்ற மண்டபங்களை கட்டியுள்ளனர். அதன்படியே, விழுப்புரம் அருகே திருக்குணம் ஊராட்சி, கொசப்பாளையத்தில் இரண்டு கல் மண்டபங்களை கட்டியுள்ளனர். பல்லவர்கள், தேசிங்கு காலம் வரை, வரலாற்று சின்னமான கோவில்கள், தானிய கிடங்குகள், இதுபோன்ற மண்டபங்களை சிறப்பாக பாதுகாத்து வந்துள்ளனர். அதன் பிறகு வந்த மத்திய, மாநில ஆட்சியாளர்கள், கவனிக்காமல் விட்டனர். இந்த மண்டபங்கள், கருங்கற்கலால் கலை நயத்துடன், ஏராளமானோர் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. மண்டபத்தில் கோபுரத்திற்கு கீழே கிணறும் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த மண்டபம் அருகே சிவன், காளி கோவில்கள் இருந்ததாகவும், சிவனையும், காளியையும் தரிசனம் செய்துவிட்டு மன்னர்கள் போருக்கு செல்வதாகவும் சொல்லப்படுகிறது. இதனருகே காளி சிற்பமும் உள்ளது. இந்த மண்டபங்கள் சிதைந்து சமூக விரோதிகளின் கூடாரமாகியுள்ளது. இடிந்து விழும் நிலையில் உள்ள ஆபத்தான இந்த மண்டபத்தில், மாணவர்கள் இங்கு விளையாடுகின்றனர். இது அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இதே போல், விழுப்புரம் அடுத்த திருவெண்ணெய்நல்லுார், பாலப்பட்டு, செஞ்சி அடுத்த கடலி, காரானந்தல், செல்லபிராட்டி உள்ளிட்ட இடங்களிலும் கல் மண்டபங்கள் உள்ளன. இவைகள், கி.பி.15 மற்றும் 16ம் நுாற்றாண்டில் செஞ்சியை ஆண்ட நாயக்கர்கள் கால கட்டடங்கள் என்றும், அக்காலத்தில் நடை பயணத்தை மேற்கொள்ளும் வழிப்போக்கர்கள் தங்கி இளைப்பாறிச்செல்ல அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கோவில் மண்டபங்களை போல் உருவாக்கப்பட்டுள்ள இந்த மண்டபங்களின் துாண்களில் அழகிய சிற்பங்கள் உள்ளன. ஆனால், பராமரிப்பின்றி, மரம், செடிகள் முளைத்து வீணாகி வருவதாக வரலாற்று ஆய்வாளர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். இந்த மண்டபங்களில், பிற்காலங்களில் பல்வேறு ஊர்களுக்கு பயணம் செல்வோர், திருப்பதி போன்ற ஆன்மிக பயணம் செல்வோர் தங்கி ஓய்வெடுத்து சென்றுள்ளனர். இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க மண்டபங்களை புதுப்பித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நல்லா ரிப்பேர் பண்ணி வெச்சா குடிகாரப் பயலுலும், கஞ்சா அடிப்பவனும் வந்து தூங்குவான். ஒண்ணும் பண்ண முடியாது.