உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனங்களில் 64 குறுகிய கால தொழிற்பயிற்சிகள்

சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனங்களில் 64 குறுகிய கால தொழிற்பயிற்சிகள்

விழுப்புரம் : ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனங்களில், 64 குறுகிய கால தொழிற்பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;கிராமப்புற இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு ஏற்படுத்த, சென்னை தவிர 37 மாவட்டங்களிலும், ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. அரியலுார், துாத்துக்குடி, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உண்டு உறையிட வசதி உள்ளது.இம்மையங்களில், மொபைல்போன் பழுது நீக்குதல், ஓட்டுனர் உரிமம் பயிற்சி, வீட்டு உபயோக பொருட்கள் பழுது நீக்குதல், கொத்தனார் பயிற்சி, பிளம்பிங் பயிற்சி, தச்சு பயிற்சி, இருசக்கர வாகன பழுது நீக்குதல், ஒயரிங், அலுமினியம் பேப்ரிகேஷன், வெல்டிங் பயிற்சி உள்ளிட்ட 64 வகை பயிற்சிகள் கட்டணமின்றி, 18 முதல் 45 வயதுக்குட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு 8ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்ட படிப்பு வரை படித்தவர்கள் பயிற்சி பெறலாம். குறைந்தது 10 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை பயிற்சியளிக்கப்படும். மதிய உணவு, சிற்றுண்டி, சீருடை, பாட பொருட்கள், அடிப்படை தொழில் கருவிகளும் வழங்கப்படுகிறது.சுய தொழில் குறித்து பயிற்சி அளிப்பதுடன், உகந்த தொழில் வாய்ப்புகளை கண்டறிதல், தொழில் திட்டம் தயாரித்தல், சந்தைப்படுத்துதல் பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. விளக்கப்பட காட்சிகள், தொழில் உபகரணங்களை பயன்படுத்துதல், கணினி வகுப்பு, மென் திறன் பயிற்சி, செயல்முறை வகுப்புகள் பின்பற்றப்படுகிறது.பயிற்சி முடிவில், ஊரக வளர்ச்சி துறை அமைச்சக அனுமதி பெற்ற நிறுவனம் மூலம் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்து சுய வேலைவாய்ப்பில் ஈடுபட கடன் உதவி, வங்கிகள் மூலம் வழங்கப்படும். விழுப்புரம் மாவட்ட இளைஞர்கள் இத்தொழில் பயிற்சிகளில் சேர்ந்து பயன் பெற, விழுப்புரம், மாம்பழப்பட்டு சாலை, ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் 7598466681 என்ற மொபைல் எண்ணிலும், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் அலுவலக 04146 -223736, 1800 309 8039 எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை