பைக் மீது வேன் மோதி விபத்து கோட்டக்குப்பம் அருகே வாலிபர் பலி
கோட்டக்குப்பம்:: கோட்டக்குப்பம் அருகே பைக் மீது, தோஸ்த் வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.மரக்காணம் அடுத்த மஞ்சக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கபிரியேல், 32; புதுச்சேரி மொபைல்கடை ஊழியர். நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்து விட்டு, இ.சி.ஆர்., வழியாக பைக்கில் வீட்டிற்கு திரும்பினார்.மஞ்சக்குப்பம் கோவிலை கடக்கும் போது, சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற தோஸ்த் வேன், கபிரியேல் ஓட்டிச்சென்ற பைக் மீது மோதியது. அதில் துாக்கி வீசப்பட்டவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.கோட்டக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்தவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.