உள்ளாட்சி அமைப்புகளில் நியமன பதவிகளுக்கு... மனு தாக்கல்; மாற்றுத்திறனாளிகள் ஆர்வமுடன் பங்கேற்பு
தமிழகத்தில் சட்டசபை, உள்ளாட்சி தேர்தலில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி ஒதுக்கீடு வழங்கி வாய்ப்பளிக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கையை நிறைவேற்றவும், உள்ளாட்சி அமைப்புகளில் குரல் கொடுக்கவும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்த கோரிக்கையை ஏற்ற, முதல்வர் ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகள், உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள் என அறிவித்தார்.இதனையடுத்து, அதற்கான சட்டம் பிறப்பிக்கப்பட்டு, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி அமைப்புகளில் தலா ஒரு உறுப்பினர் பதவிகளில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 13 ஆயிரத்து 988 பதவிகள் நியமனம் வழங்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர் நியமன பதவிகளுக்கு ஜூலை 1ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை மனு தாக்கல் செய்யவும், கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 31ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.மாவட்டத்தில், ஒரு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், 13 ஒன்றிய கவுன்சிலர்கள், 688 ஊராட்சி உறுப்பினர்கள், 3 நகராட்சி கவுன்சிலர்கள், 7 பேரூராட்சி கவுன்சிலர்கள் என 718 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய கவுன்சில் உறுப்பினர் நியமன பதவிகளுக்கு, மாற்றுத் திறனாளிகள் நேற்று மனு தாக்கல் செய்தனர்.விழுப்புரம் நகராட்சி மற்றும் மாவட்ட ஊராட்சி அலுவலகத்திற்கு, விழுப்புரம் மாவட்ட புதிய அலை மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் சார்பில் நேற்று காலை ஊர்வலமாக வந்தனர்.இவர்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பில், மாற்றுத் திறனாளிகள் பிரதிநிதித்துவத்திற்கான பதவிக்கு மனு தாக்கல் செய்தனர்.விழுப்புரம் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு டிசம்பர் 3 இயக்கத்தின் பொதுச் செயலாளர் அண்ணாமலையும், விழுப்புரம் நகராட்சி கவுன்சிலருக்கு தமிழரசன், ஷர்மிளா ஆகியோரும், கோலியனுார் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பாஸ்கர், ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு செந்தில்குமார், வள்ளி, துரை, சிவக்குமரன், நாராயணி, சந்தோஷ், வீரப்பன் உள்ளிட்டோர் நகராட்சி அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தனர்.இதே போல், பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் மாற்று திறனாளிகள் பலர் மனு தாக்கல் செய்தனர்.அரசு குறிப்பிட்டுள்ள சேவை பணிகள் உள்ளிட்ட தகுதியின் அடிப்படையில், கலெக்டர் தலைமையிலான குழு, நியமன உறுப்பினர்களை தேர்வு செய்து அறிவிக்கப்பட உள்ளனர்.
தேர்தல் குறித்த விழிப்புணர்வு இல்லை
உள்ளாட்சி அமைப்புகளில் நியமன பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் தவிர, பலருக்கு தேர்தல் குறித்த விபரம் தெரியவில்லை. கடந்த 1ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தும், இதுகுறித்து அதிகாரிகள் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாததால் வேட்பு மனு தாக்கல் நேற்று தாமதமாக துவங்கியது. இந்த தேர்தல் குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.