பயணிகள் நிழற்குடையில் விழிப்புணர்வு பேனர்
விழுப்புரம்: விழுப்புரம் பயணிகள் நிழற்குடையில், அரசியல் கட்சியினர் பேனரை அகற்றி விழிப்புணர்வு பேனரை போலீசார் வைத்துள்ளனர். மாவட்டத்தில் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஆனால், விழுப்புரம் நகராட்சியில் நான்கு முனை சிக்னல் மற்றும் புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள பயணிகள் நிழற்குடைகளில் அரசியல் கட்சியினர் போட்டி போட்டு டிஜிட்டல் பேனர்களை வைத்து வந்தனர். இதனால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் உள்ளதாகவும், பேனர்களை அகற்ற வேண்டும் என 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன், பயணிகள் நிழற்குடைகளில் ஒட்டியிருந்த டிஜிட்டல் பேனர்களை போலீசார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். தொடர்ந்து, புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள பயணிகள் நிழற்குடையில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு பேனரை ஒட்டியுள்ளனர். இதேபோன்று, நான்குமுனை சிக்னலில் உள்ள இரண்டு பயணிகள் நிழற்குடைகளிலும் விழிப்புணர்வு பேனர் ஒட்டி, அரசியல் கட்சியினர் பேனர் ஒட்டுவதற்கு நிரந்தர முற்றிப்புள்ளி வைக்கலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.