ஆபத்தை உணராமல் நீர் நிலைகளில் குளியல்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் சமீப காலமாக பெய்து வரும் மழையால் ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. நீர் நிலைகளில் யாரும் குளிக்க கூடாது என போலீசார் அறிவுறுத்தியும் ஆபத்தை உணராமல் பலர் குளிக்கின்றனர். இதனைத் தவிர்க்க போலீசார் ஆறுகள் மற்றும் நீர் நிலை பகுதிகளில் ரோந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில், பொதுப்பணி துறை (நீர்வளம்) கட்டுப்பாட்டில் 505 ஏரிகள் உள்ளன. இதில் 60 ஏரிகளில் நீர் நிரம்பிய நிலையில், சில ஏரிகளில் மதகுகள் உடைந்து தண்ணீர் வெளியே வீணாகிறது. இந்த தண்ணீர், விளை நிலங்களில் புகுந்ததால் நெற்பயிர்கள் உட்பட பல விவசாய சாகுபடி பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகியது. இது மட்டுமின்றி, திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனுார் அணையில் இருந்து வெளியேற்றிய தண்ணீர் ஆறுகளில் ஓடுகிறது. இந்த தண்ணீர், விழுப்புரம் அருகே ஏனாதிமங்கலத்தில் உள்ள எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் இருந்து பிரிந்து தென்பெண்ணை ஆற்றிலும், மலட்டாற்றிலும் கரைபுரண்டு செல்கிறது. நீர் நிலைகளில் தண்ணீரை பார்க்கும் இளைஞர்கள், சிறுவர்கள் குளிக்கின்றனர். இந்த ஆற்றில், அதிகளவு மணல் எடுக்கப்பட்டுள்ளதால் பல இடங்களில் ராட்சத பள்ளங்கள் உள்ளது. இந்த பள்ளங்கள் தண்ணீரால் மூடியுள்ளதால், குளிப்போருக்கு அதில் தெரியாமல் சிக்கி வெளியேற வழியின்றி மூச்சு திணறி தண்ணீரில் மூழ்கி இறக்கும் நிலை உள்ளது. இதுபோன்று சிறுவர்கள், இளைஞர்கள் என பலர் இறந்துள்ளனர். சமீபத்தில், விழுப்புரம் சாலாமேடு பகுதியைச் சேர்ந்த கட்டட தொழிலாளி தென்பெண்ணை ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கி இறந்தார். மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீரில் யாரும் குளிக்கக் கூடாது என எச்சரித்துள்ளனர். இதை கண்டு கொள்ளாமல் ஏனாதிமங்கலத்தில் உள்ள எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் சிறுவர்கள், இளைஞர்கள் குளிக்கின்றனர். மேலும், பலர் ஆற்றில் ஆழமான பகுதிகளுக்குச் சென்றும் குளிக்கின்றனர். காவல் துறை மற்றும் பொதுப்பணி துறை (நீர்வளம்) மூலம் யாரும் குளிக்க கூடாது என எச்சரிக்கை பலகை வைத்தும், யாரும் மதிக்காமலும் ஆபத்தை உணராமலும் குளிக்கின்றனர். இதனைத் தடுக்க அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆற்றுப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு, பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.