மரக்காணம், கோட்டகுப்பம் கடற்கரையில் படகுகள் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தம்
மரக்காணம்: விழுப்புரம் மாவட்டத் திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மரக்காணம் பகுதி மீனவர்கள் படகுகளை மேடான இடத் தில் நிறுத்திவைத்துள்ளனர்.வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 30ம் தேதி மகாபலிபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்ககூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று 29ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.மரக்காணம், கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள தாழங்காடு, கைப்பாணிகுப்பம், எக்கியர்குப்பம், அனுமந்தைகுப்பம், கூனிமேடுகுப்பம், நடுக்குப்பம் உள்பட 19 மீனவ கிராம மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்ககூடாது.மேலும் மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் பைபர் படகு, வலை, மோட்டார் உள்ளிட்ட பொருட்களை கடற்கரையில் இருந்து மேடான பகுதிக்கு எடுத்து சென்று பாதுகாப்பாக வைக்கவேண்டும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்திருந்தது.இதனால் 19 மீனவ கிராமத்தில் உள்ள மீனவர்கள் தங்கள் படகுகள் மீன்பிடி சாதனங்களை மேடான பகுதியில் வைத்துள்ளனர். வழக்கத்தை விட நேற்று கடல் அலையின் சீற்றம் அதிகரித்துள்ளது. மீனவர்கள் கடந்த நான்கு நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் மரக்காணம், கோட்டக்குப்பம், திண்டிவனம் மீன் மார்க் கெட்டுகள் வெறிச்சோடிகாணப்பட்டது.