அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் சேர்ப்பு பெற்றோர்களுக்கு அழைப்பு
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் 2 முதல் 5 வயதுடைய குழந்தைகளை, அங்கன்வாடி மையத்தில் சேர்க்கும்படி பெற்றோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் பழனி செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மூலம் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியை மேம்படுத்த 1,741 அங்கன்வாடி மையங்களில் சத்துமாவு, ஊட்டசத்தோடு கூடிய கலவை உணவு, முன்பருவ கல்வி வழங்கப்படுகிறது.குறிப்பாக 2 முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு செய்கைப் பாடல், கதை, விளையாட்டு, கல்வி உபகரணங்கள் ஆகியவை மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.குழந்தைகளின் உடல், மொழி, மனம், சமூகம் மற்றும் அறிவு வளர்ச்சிக்கு தேவையானவற்றை ஆடிப்பாடி, விளையாடு பாப்பா எனும் சிறப்பு பாடத்திட்ட திருப்புதலுடன் 12 மாதங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.குழந்தைகள் மைய அங்கன்வாடி பணியாளர்கள் தற்போது வீடுகள் தோறும் குழந்தை சேர்க்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.பெற்றோர்கள் தவறாமல் தங்களது குழந்தைகளை மையத்தில் வரும் ஜூன் மாதத்தில் சேர்க்க வேண்டும்.