உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கெங்கராம்பாளையம் டோல்கேட் அருகே கல்லுாரி பஸ்கள் நேருக்கு நேர் மோதல்

கெங்கராம்பாளையம் டோல்கேட் அருகே கல்லுாரி பஸ்கள் நேருக்கு நேர் மோதல்

கண்டமங்கலம்: கெங்கராம்பாளையம் டோல்கேட் எதிரே உள்ள 'யூ டர்ன்' பகுதியில், இரண்டு தனியார் கல்லுாரி பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில், இரு பஸ்களிலும் பயணம் செய்த மாணவ-மாணவிகள் 100 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலையில், கெங்கராம்பாளையத்தில் டோல்கேட் அமைந்துள்ளது. இந்த டோல்கேட்டிற்கு கிழக்கே 300 மீட்டர் தொலைவில் வாகனங்கள் சர்வீஸ் சாலையில் செல்ல 'யூ டர்ன்' அமைக்கப்பட்டுள்ளது. விதி மீறி ராங் ரூட்டில் செல்லும் வாகனங்களால், இந்த பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பது தொடர்கதையாக உள்ளது. இப்பகுதியில் கடந்த 13ம் தேதி தேதி இரவு விதி மீறி வந்த கார் மற்றொரு கார் மீது மோதிய விபத்தில் 4 பேர் இறந்தனர். இந்நிலையில், நேற்று காலை கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரி பஸ், புதுச்சேரியில் இருந்து 50 மாணவர்களுடன் கல்லுாரிக்கு சென்றுகொண்டிருந்தது. காலை 8.50 மணிக்கு கெங்கராம்பாளையம் டோல்கேட் எதிரே உள்ள 'யூ டர்ன்' வழியாக வடக்கே உள்ள சர்வீஸ் சாலையில் திரும்ப முயன்றது.அதே நேரம் புதுச்சேரியில் இருந்து, கெங்கராம்பாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரிக்கு, மாணவ - மாணவிகளை ஏற்றிச் சென்ற பஸ், மதகடிப்பட்டு மேம்பாலத்தின் வழியே ராங் ரூட்டில் (வடக்குப் பகுதி சாலை) சென்று, 'யூ டர்ன்' பகுதியில் தெற்கே உள்ள சர்வீஸ் சாலையில் அதிவேகமாக திரும்ப முயன்றபோது, எதிரே வந்த மருத்துவக் கல்லுாரி பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் மருத்துவக் கல்லுாரி பஸ்சின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் இரண்டு கல்லுாரி பஸ்களிலும் பயணம் செய்த 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதில் காயமடைந்த மருத்துவக் கல்லுாரி பஸ் டிரைவர், அதே கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்ட போதிலும், மாணவ - மாணவிகள் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. இதையடுத்து மாணவ - மாணவிகள் அதே கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். விபத்தால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து வளவனுார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எச்சரிக்கை பலகை அவசியம்

புதுச்சேரியின் எல்லையான மதகடிப்பட்டு கல்லுாரி சாலை நான்குமுனை சந்திப்பு - கெங்கராம்பாளையம் டோல்கேட் இடையே உள்ள 'யூ டர்ன்' பகுதியில், தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இருந்தும், இப்பகுதியில் எச்சரிக்கை பலகை ஏதும் அமைக்கப்படவில்லை. வாகன ஓட்டிகள் அறிந்துகொள்ளும் வகையில், நான்கு வழிசாலைக்கு நடுவே டிஜிட்டல் அறிவிப்பு பலகை அமைத்து விபத்துக்களை தடுக்க 'நகாய்' நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ