ஊதியம் வழங்காமல் அலைக்கழிப்பதாக கலெக்டர் காலில் விழுந்து தம்பதி மனு
விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஊதியம் வழங்காமல் அலைகழிப்பதாக, டேங்க் ஆப்பரேட்டர் தனது மனைவியுடன், கலெக்டரின் காலில் விழுந்து அழுதபடி மனு அளித்ததால் பரபரப்பு நிலவியது. விழுப்புரம் கலெக்டர் அலுவலக வாயில் பகுதியில், நேற்று காலை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது, கோரிக்கை மனுவோடு வந்த விழுப்புரம் அடுத்த ஆலாத்துாரைச் சேர்ந்த பரமசிவம், 55; இவரது மனைவி இந்திராணி, 50; ஆகியோர், திடீரென கலெக்டரின் காலில் விழுந்து அழுதபடி மனு அளித்தனர். கலெக்டர் அவர்களிடம் விசாரித்தபோது, பரமசிவம் கூறுகையில், 'நான் ஆலத்துார் கிராமத்தில் டேங்க் ஆப்பரேட்டராக கடந்த 2008ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறேன். ஊராட்சி நிர்வாகத்தினர், என்னை சரிவர பணி செய்ய விடுவதில்லை. சொந்த தேவைகளுக்காக மின் மோட்டாரை இயக்கும்படி கூறுகிறார்கள். அதற்கு நான் மறுத்ததால், மோட்டார் அறையின் பூட்டை உடைத்துவிட்டு, என்னை பணி செய்ய விடாமல் தடுக்கின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக சரியாக ஊதியம் வழங்கவில்லை. பொங்கல் போனசும் வழங்கவில்லை. எனக்கு சேர வேண்டிய சம்பள பாக்கியை கணக்கிட்டு வழங்க அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. தாங்கள் விசாரணை நடத்தி ஊதிய நிலுவைத்தொகையை விரைந்து வழங்குவதுடன், எனக்கு உரிய பாதுகாப்பும் வழங்க வேண்டும்' என்றார். விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார்.