உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நீர் ஆதாரத்தை மேம்படுத்த சங்கராபரணி ஆற்றில் தடுப்பணை: விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தல்

நீர் ஆதாரத்தை மேம்படுத்த சங்கராபரணி ஆற்றில் தடுப்பணை: விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தல்

விழுப்புரம்: செஞ்சி, விக்கிரவாண்டி தாலுகாவில் நீர் ஆதாரத்தை மேம்படுத்த சங்கராபரணி ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில், நீர் வளத்தை அதிகரிக்க நந்தன் கால்வாய்க்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான புதிய திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும். நந்தன் கால்வாய் திட்டம் குறித்து, முழு ஆய்வு செய்யாமல், அடிக்கடி நிதி ஒதிக்கி அரைகுறையாக பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.மாவட்டத்திற்கான தண்ணீர் தேவையை ஈடுசெய்ய, நந்தன் கால்வாய் திட்டத்தை விரிவுபடுத்தவும், சாத்தனுார் அணையிலிருந்து திருவண்ணாமலை மாவட்டம், ஓலையாறு வழியாக, அங்குள்ள சமுத்திரம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்து, அதிலிருந்து துறிஞ்சில் ஆற்றின் மூலம், நந்தன் கால்வாய்க்கு தண்ணீர் கொண்டு வருவது நல்ல தீர்வாக இருக்கும்.மேலும், நந்தன் கால்வாயில், விழுப்புரம் மாவட்டத்திற்கு தண்ணீர் வருவதற்கான கொளத்துார் ெஷட்டரை திறக்காததால், செஞ்சி பகுதி ஏரிகள் நிரம்பாமல், மழை நீர் நேராக கடலில் கலக்கிறது. இப்படியே, துறிஞ்சலாற்று தண்ணீர் பெருமளவு வீணாகியுள்ளது. தற்போது மழை பெய்தாலும் வீணாகும்.திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட நிர்வாகம், இதில் கவனம் செலுத்தி, நந்தன் கால்வாய் மூலம், விழுப்புரம் மாவட்ட ஏரிகளுக்கு தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.நந்தன் கால்வாயில், பொத்தேரியில் துவங்கி தேவதானம்பேட்டை வரை உள்ள வனப்பகுதியில், மண் சரிந்தும், புதர் மண்டியும் இருப்பதால், தண்ணீர் தடைபட்டுள்ளது. 300 மீட்டர் அடைப்புகளை அகற்றி, பனமலை ஏரிக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.செஞ்சி அடுத்த பாக்கம் மலையில் துவங்கும் வராக நதியே, சுற்றுப்பகுதி தண்ணீர் தேவையை நிறைவு செய்து வருகிறது. வராகநதி, செவலப்புரை அருகே சங்கராபரணி ஆற்றில் இணைகிறது.பிறகு சங்கராபரணி ஆறு, வீடுர் அணையை அடைந்து, அங்கிருந்து புதுச்சேரி வரை சென்று கடலில் கலக்கிறது.இந்த சங்கராபரணி ஆற்றில் தடுப்பணை இல்லாததால், கனமழை வெள்ளம் வந்தாலும், சில நாட்களிலேயே வறண்டு விடுகிறது. இதனால், சங்கராபரணி ஆற்றில் தடுப்பு அணை கட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.செஞ்சி அடுத்த மேல்கலவாய் பகுதி சங்கராபரணி ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்கு, பொதுப்பணித் துறையினர் கடந்த 3 ஆண்டுக்கு முன்பே ஆய்வு நடத்தினர்.தடுப்பணை கட்ட தகுதியான இடம் என்பதையும் முடிவு செய்து, அரசுக்கு பரிந்துரை செய்தனர். ஆனால், இதுவரை தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.சங்கராபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால், செஞ்சி, விக்கிரவாண்டி பகுதி மக்களும், விவசாயிகளும் பயன் பெறுவர்.சங்கராபரணி ஆற்றில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி, முதல்வருக்கும், கலெக்டருக்கும் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ